ஜாவி சட்டமன்ற ஏற்பாட்டில் வசதி குறைந்த பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு “மக்கள் நலன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜாவி தொகுதியில் வாழும் 100 குடும்பத்தினர் நன்மை பெறுவர். இத்திட்டத்தை ஜாவி சட்டமன்றமும் மலேசிய செங் சியான் கழகமும் இணைந்து கடந்த 26/6/2016-ஆம் நாள் சங்லாங் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஜாவி சமூக முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு கழக உதவியுடன் ஜாவி தொகுதியில் வாழும் வசதி குறைந்த 100 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டது. இந்த சமூக நல திட்டத்தின் மூலம் ஒவ்வொருவரும் ஓர் ஆண்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சமையல் பொருட்கள் பெற்றுக் கொள்வர். இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவினத்தைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ.
இத்திட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்படும் என்றார். இத்திட்டதில் அனைத்து இன மக்களும் இடம்பெறுகின்றனர். இத்திட்டத்தில் பொருளுதவி பெறும் 100 பேர்களில் 59 பேர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் வசதி குறைந்தவர்கள் மட்டுமின்றி உடல் ஊன முற்றோர், தனித்து வாழும் தாய்மார் மற்றும் நோயாளிகள் அங்கம் வகிக்கின்றனர்.
இத்திட்டத்தை துவக்கி வைத்த ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ, முதல் முறையாக ஓர் ஆண்டுக்கு பொருளதவி வழங்கும் திட்டம் ஜாவி தொகுதியில் துவங்கப்பட்டது என அகம் மகிழ தெரிவித்தார். இத்திட்டத்தில் இடம்பெறும் பொது மக்கள் நன்மை பெறுவர் என்பதே எனது இலக்கு என்றார்.