ஜோர்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் ‘அரசு தொடர்பு நிறுவனம்’ ( Government Link Companies, GLC) 2016- ஆம் ஆண்டு முதல் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. இம்மாநிலத்தில் 11 ஜி.எல்.சி நிறுவனங்கள் செயல்படுவதாகவும் 2016 முதல் செப்டம்பர் 2018 வரை ரிம87.2மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மாச்சாங் புபு சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் தொடுத்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த காலங்களில் கூட்டரசு அரசாங்கத்திடம் இருந்து பினாங்கிற்கு ஒத்துழைப்பு கிடைக்கப்பெறாததால் ஜி.எல்.சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. தற்போது நம்பிக்கை கூட்டணி அரசு கூட்டரசு அரசாங்கத்தை ஆட்சிப் புரிவதால் இந்நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் செயல்பாடு கூட்டரசு அரசாங்க துறையுடன் ஒன்றுக்கும் ஒன்று பாதிக்காமல் இருப்பதை கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
மாநில அரசின் கீழ் செயல்படும் இந்த ஜி.எல்.சி நிறுவனங்கள் வியாபார நோக்கத்துடன் அமைக்கவில்லை எனவும் மாநில வளர்ச்சிக்கு மறைமுகமாக செயலாற்றுவதாகவும் நில விவகாரம் & மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்கு உறுப்பினருமான சாவ் தெரிவித்தார். இந்நிறுவனங்கள் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்குத் துணைபுரிகிறது.
உதாரணமாக பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி செயலகத்திற்கு ஓர் ஆண்டுக்கு ரிம 1 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கி ஏறக்குறைய 1 பில்லியன் மாநிலத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறுகிறது. இந்த செயலகத்தின் மூலம் பிற நாடுகளிலிருந்து நடத்தப்படும் மாநாடு அல்லது கண்காட்சி வாயிலாக வருவாய் ஈட்டப்படுகிறது என மேலும் தெளிவுப்படுத்தினார்.
மேலும், இந்த ஜி.எல்.சி நிறுவனங்களின் வரவுசெலவு சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமா என லீ காய் லூன் கேள்வி எழுப்பினார்.
பினாங்கில் செயல்படும் ஜி.எல்.சி நிறுவனங்களில் இந்து அறப்பணி வாரியத்தைத் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் சட்டப்பூர்வமான அரசு துறை இல்லை எனவும் நிறுவனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் கொன் யாவ் எடுத்துரைத்தார். எனவே இந்து அறப்பணி வாரியத்தின் வரவுசெலவு கணக்குகள் மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் என்றார். இருப்பினும் பிற நிறுவனங்களின் கணக்கியல் விவரங்கள் சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதில் எவ்வித தடையும் இல்லை என கூறினார்.