ஜுப்லீ இல்ல முதியோர்களுடன் அனைத்துலக சைவ நாள் கொண்டாட்டம்.

மலேசிய சைவ நாள் பிரச்சார செயற்குழு சாது வஸ்வானி சமூக நல நிதியின் ஆதரவுடன் அனைத்துலக சைவ நாளை முன்னிட்டு இங்கு ஜாலான் சுங்கை டுவாவில் அமைந்துள்ள சில்வர் ஜுப்லி முதியோர் இல்லத்தினருக்குச் சைவ மதிய உணவுகளை வழங்கியது. சைவ நாள் அல்லது விலங்குகள் உரிமை நாளாகத் திகழும் நவம்பர் 25-ஆம் திகதி அன்று சுமார் 13686 மலேசியர்கள் சைவத்தைக் கடைப்பிடித்ததாகச் சாது வஸ்வானி ஆய்வுக் கழகத் தலைவர் திரு பிஷு முரளி ஹஸராம் தெரிவித்தார். சைவ நாளை முன்னிட்டு பினாங்கு டைம்ஸ் ஸ்குவேரில் 10-ஆம் முறையாகச் சைவ நாள் தொண்டு விழா நவம்பர் 18-ஆம் திகதி கொண்டாடப்பட்டதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

வசதி வாய்ப்பற்ற ஏழ்மை மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், உடல் ஆரோக்கியம் குறைந்தவர்களுக்கும், வயது, இனம், மதம் பேதமின்றி அனைவருக்கும் உதவும் நோக்கில் இந்தச் சாது வஸ்வானி சமூக நிதி செயற்பட்டு வருகிறது என்றார். அவ்வகையில், இம்முறை ஜுப்லீ முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்குச் சைவ உணவுகளை வழங்கி சைவ நாளை கொண்டாடியதில் அளவற்ற மகிழ்ச்சியடைந்ததாகச் சாது வஸ்வானி ஆய்வுக் கழகத் தலைவரும் அதன் உறுப்பினர்களும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு பீ பூன் போ கலந்து சிறப்பித்தார். சாது வஸ்வானி கழகம் சார்பில் அம்முதியோர் இல்லத்திற்கு இலவச மருந்துகளை வழங்கினார். அதன் பின், மதிப்பிற்குரிய பீ போன் போ, மண்டபத்தில் அமர்ந்திருந்த முதியோர்களுக்குச் சைவ உணவுகளை வழங்கினார். முதியோர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் சாது வஸ்வானி கழகத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் ஹிந்தி பாடல்களுக்கு அபிநயம் பிடித்தனர். அதில் ஒரு முதியோர் அவர்களின் நடனத்தைக் கைத்தட்டி ரசித்துப் பார்த்தார்.

1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜுப்லீ முதியோர் இல்லத்தில் தற்பொழுது சுமார் 200 முதியோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வில்லம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ்ச் செயற்படுகிறது. பினாங்கு மாநில அரசிடமிருந்து ஆண்டுதோறும் ரிம20,000-உம்  மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் ரிம200,000-உம் நிதியுதவி பெறும் இவ்வில்லத்தின் மாத செலவினமே ரிம150,000த்தைத் தொடுகிறது என இவ்வில்லத்தின் பொது செயற்குழு உறுப்பினரான டத்தோ யோ ஜூ சயிக் தெரிவித்தார். பல நல்லுள்ளங்களின் ஈடு இணையற்ற உதவியாலும் அரசு சார்பற்ற தனியார் நிறுவனங்களின் ஆதாரவாலும்தான் இவ்வில்லம் தொடர்ந்து தங்குதடையின்றி செயற்பட்டு வருகிறது என்று பொது மக்களுக்குத் தம் மனம்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இம்முதியோர் இல்லத்திற்குப் பொருளுதவியோ பணவுதவியோ செய்ய விரும்புபவர்கள். நேரடியாக இவ்வில்லத்திற்கு வந்து உதவலாம் அல்லது ‘Penang & Province Wellesly  Silver Jubilee Fund’ என்னும் பெயருக்குக் காசோலை அனுப்பலாம்.

முதியோர் இல்லத்தைப் பற்றி எழுதுகையில் ஒரு ஹைக்கூ நினைவுக்கு வருகிறது.

 

இது ஒரு மனிதக்காட்சி சாலை,

இங்கு மனிதர்களைக் காண மிருகங்கள் வந்து போகின்றன.

முதியோர் இல்லம்.

அன்பான வாசகர்களே, முதுமை வந்துவிட்டதென்று உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அதிகபட்சம் அவர்கள் எதிர்பார்க்கும் அன்பையும் அரவணைப்பையும் கொடுத்து அவர்களைப் பாதுகாப்பதே நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்றிக் கடனாகும். இறைபக்தியைவிட மிக உயர்ந்தது பெற்றோர்களின் அன்பு. எனவே, கோவில்களை வலம் வருவதைவிட பெற்றோர்களின் நலம் அறிவதே முக்கியமான பணியாகும். முதியோர் இல்லங்களின் பெருக்கத்திற்கு நாம் காரணியாவதைத் தவிர்ப்போம்; பெற்றோர்களை அளவுகடந்து நேசிப்போம்; அவர்களை உயிராய்க் காப்போம்!