ஜூரு – ஜூரு தோட்ட தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் தீமிதி திருவிழாவிற்குச் சிறப்பு வருகை மேற்கொண்ட பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ ஆலயத்தில் அருகாமையில் உள்ள ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ரிம3,000 கல்வி நிதியுதவி வழங்கினார்.
இந்தியர்களின் வாழ்வில் ஆலயமும் தமிழ்ப்பள்ளியும் இன்றியமையாதது என்பதால் மாநில அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கினாலும், கூடுதல் நிதியாக இரண்டாம் துணை முதலமைச்சர் நிதியிலிருந்து இந்நிதியத்தை ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்குவதாக ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.
ஜுருத் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் இராஜ ராஜன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அத்தொகைக்கான மாதிரி காசோலையை ஜக்டீப் சிங் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
இதனிடையே ஜூரு தோட்ட தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர தீமிதி திருவிழா யோகேஸ்வரன் இராஜேந்திரன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. தீக்குழி இறங்குதல், கரகம் எடுத்தல், கத்தி மேல் நின்று அருள் வாக்கு சொல்லுதல் என்று பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளுடன் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
தீமிதி திருவிழாவிற்குத் துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங், அவரின் அலுவலக அதிகாரி டத்தோ மு.இராமசந்திரன், தி.விஸ்வநாதன், ஆத்மாஸ்வருமானந்தா சரஸ்வதி சுவாமிகள், ந.மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சின் வென், , தலைமை ஆசிரியர் இராஜ ராஜன், விநாயக மூர்த்தி, ஸ்ரீ சங்கர் மேலும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.