ஜெர்மன் தொழிற்பயிற்சி திட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் அறிமுகம்.

பினாங்கு மாநில அரசு திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் பொருட்டு ஜெர்மன் தொழிற்பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்தொழிற்பயிற்சி திட்டம் பினாங்கு தொழிற்திறன் மேம்பாட்டுக் கழகம், அனைத்துலக தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தொழிற்துறையில் டிப்ளோமா சான்றிதழ் பெறுவதோடு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரிம900-ம் பெறுவர். இத்திட்டத்தில் அதிகமான மாணவர்கள் பங்கேற்கவும் அத்தொழிற்பயிற்சி பற்றிய கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள penangdvt.com எனும் வலைத்தளத்தை நாடலாம் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். எதிர்கால பயிற்சி பெறுநர் இத்திட்டத்தில் பங்குக் கொள்ள இந்த வலைத்தளம் வழிகாட்டியாகத் திகழும்.
இத்திட்டமானது உள்நாட்டு தொழிலாளர்கள் தொழிற்பயிற்சியில் ஈடுப்படுவதற்கும் அனைத்துலக அங்கீகாரம் வழங்கவும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், டிப்ளோமா சான்றிதழ் திறன் மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்படுவதோடு மலேசிய கல்வி திட்டத்திலும் இடம்பெறுகிறது. மேலும் பட்டத்தாரிகளுக்கு “German Chamber certificate” சான்றிதழ் கொடுக்கப்படும். தற்போது இத்திட்டத்தில் 7தொழிற்சாலைகளான பி.ப்ராவுன், மலேசிய கார்சம், டைனாகிராப், இனாரி, ஒஸ்ராம், ரோபர்ட் போஸ், சாவ்த்ரன் கலந்து கொண்டன. இத்திட்டத்தின் சுலோகமாக
“வேலை, ஊதியம், மற்றும் கற்றல்” இடம்பெறுகிறது. கடந்த 18/9/2015-ஆம் நாள், மாநில அரசு பினாங்கு தொழிற்பயிற்சி மேம்பாட்டுக் கழகத்திற்கு இத்திட்டத்தில் 500-600 மாணவர்கள் பங்குகொள்ளும் பொருட்டு ரிம2 மில்லியன் நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது. மாணவர்கள் 42 மாதங்கள் டிப்ளோமா கல்வியை முடித்து அனைத்துலக அங்கீகாரம் பெற்ற தொழிலாளர்களாக உருவாகுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு 90 மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் கலந்து கொள்ள முடியும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக 60 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் இத்திட்ட வலைத்தளத்தை வலம் வரலாம்.