ஜார்ச்டவுன் – ஜெலுந்தோங் நாடாளுமன்ற சேவை மைய ஏற்பாட்டில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்குப் பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டன.
பத்து லஞ்சாங், சுங்கை பினாங்கு, டத்தோ கெராமாட் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த 420 பொது மக்களுக்குப் பரிசுக் கூடைகள் கொடுக்கப்பட்டன.
“இருளை நீக்கி ஒளியைத் தரும் தீபத்திருநாளானது மிகுந்த அர்த்த மிக்க நன்னாளாகும். இத்திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜெலுத்தோங் தொகுதி மக்களுக்குப் பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டதோடு விருந்தோம்பல் உபசரிப்பும் பரிமாறப்பட்டது,” என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் கூறினார்.
பண்டிகை காலங்களில் வசதிக் குறைந்த பொது மக்களுக்கு அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இப்பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முன்முயற்சியின் மூலம் வசதி குறைந்த பொது மக்கள் அனைவரின் மீதும் எங்களின் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், என்றார்.
பினாங்கைச் சேர்ந்த அழகு சாதனப் பொருட்களின் மொத்த விற்பனையாளரான டாக்டர் ஶ்ரீ லட்சுமி அவர்களின் முன்முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் பொது மக்களுக்கு இந்நிறுவனத்தின் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது என இராயர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினருமான லிம் சியூ கிம், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் தொழிலதிபர் டாக்டர் ஶ்ரீ லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பினாங்கு பெருநிலத்தில் வாழும் குடியிருப்பாளர்களும் விரைவில் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் கொம்தாரில் உள்ள புறநகர் உருமாற்ற மையத்தில் (UTC) சேவைகளுக்காக தீவுக்குச் செல்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கலாம், ஏனெனில் பட்டர்வொர்த்தில் புதிய UTC அமைப்பதற்கு மத்திய அரசு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் அறிவித்தார்.
பினாங்கின் முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங், இந்த அறிவிப்பினை ஜெலுத்தோங் நாடாளுமன்ற தீபாவளி பரிசுக் கூடை வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
UTC இல் முதன்மையாக தேசிய பதிவுத் துறை(JPN), சாலைப் போக்குவரத்துத் துறை(JPJ), உள்நாட்டு வருவாய் வாரியம்(LHDN), தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (PTPTN) மற்றும் பிற சேவைகளை வழங்கும் பல்வேறு கூட்டரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
குவான் எங் தனது உரையின் போது, பினாங்கில் இரண்டாவது UTC அமைப்பதற்கு குறிப்பாக பட்டர்வொர்த்தில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
பினாங்கு சென்ட்ரலில் UTC நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.
“இரண்டாவது UTC திறக்கப்படுவதன் மூலம், கொம்தாரில் இருக்கும் UTC இல் கூட்ட நெரிசலைக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம். இந்த முன்முயற்சி திட்டம் கொம்தாரில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல், கெடா, பேராக் மற்றும் பெர்லிஸ் போன்ற இடங்களிலிருந்து வருபவர்களுக்கு பட்டர்வொர்த்தில் சேவைகளை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்,” என்று குவான் எங் தனது உரையில் கூறினார்.