ஜோர்ச்டவுன் பாரம்பரிய விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு “காஷ்” எனும் புகழ்ப்பெற்ற விருது வென்ற அக்ரம் கான் நடன இயக்குநரின் நடனம் பினாங்கில் அரங்கேறியது. “காஷ்” எனும் படைப்பு சமகால நடனம், இந்திய பாரம்பரிய நடனம், கதக் நடனம் ஆகியவற்றின் கலவையாகத் திகழ்ந்து கடந்த ஆகஸ்டு 20 மற்றும் 21-ஆம் திகதிகளில் ஶ்ரீ பினாங்கு அரங்கத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சுற்றுப்பயணிகள் இந்நிகழ்வினைக் காண பினாங்கு மாநிலத்திற்கு வருகையளித்தனர்.
“அக்ராம் கான் மற்றும் அவரது நடனக் குழுவினர் படைப்பு பினாங்கில் நடத்துவதற்கு தாம் பெருமிதம் கொள்கிறேன்’ என இவ்விழா ஏற்பாட்டு குழுத் தலைவர் ஜோ சிடேக் தெரிவித்தார். இக்குழுவினரின் அற்புதமானப் படைப்பு பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
இரத்தினக் கம்பளங்களைப் பயன்படுத்தி இறுக்கமான ஒளி மற்றும் இருண்ட சூழலில் “காஷ்” நடனம் அரங்கேறியது. இந்நிகழ்வில் இந்து மதக் கடவுள்கள், தப்லா, கருப்பு ஓட்டைகள், இந்திய நேர சுழற்சிகள், உருவாக்குதல் மற்றும் அழித்தல் போன்ற கருப்பொருள்களைக் கொண்டு நடனம் படைக்கப்பட்டது. நடன இயக்குநர் அக்ராம் கான் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இந்திய சிற்பி அனீஷ் கபூர் மற்றும் விருது பெற்ற இசையமைப்பாளர் நிதின் சாஹ்னி உடன் இணைந்து அற்புதமானப் படைப்பை வழங்கினார்.
100-க்கும் மேற்பட்ட கலை மற்றும் பாரம்பரிய கண்காட்சிகள் ஜோர்ச்டவுன் விழாக் கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன. பினாங்கு மாநிலத்தில் காலணித்துவ ஆட்சி முதல் இன்று வரை பறைச்சாற்றப்படும் கலை மற்றும் பாரம்பரியங்கள் இவ்விழாவில் சித்தரிக்கப்படுகிறது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு நடைபெறும் இவ்விழாக் கொண்டாட்டத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவுள்ளது.
ஜோர்ச்டவுன் பாரம்பரிய விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 29 முதல் ஆகஸ்டு மாதம் 28-ஆம் திகதி வரை பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.