டபள்யூ.சி.சி சமூக பிரச்சனையின் எதிர் ஒலியாக விளங்குகிறது

Admin

தற்போதைய தொற்றுநோய் காலகட்டத்தில் பொது மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, சமூக ரீதியில்  சிறுவர் பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை  வழக்குகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இதுதொடர்பாக, மகளிர் மறுமலர்ச்சி மையம் (டபள்யூ.சி.சி) சேவை மேலாளர் மங்களேஸ்வரி, இந்த சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது  கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். 

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை நாங்கள் பெற்ற 328 ஹொட்லைன் அழைப்புகளில், 14% சிறுவர் பாலியல் வன்கொடுமைகள்  பற்றியதாகும்.

“2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறுவர் பாலியல் வன்கொடுமைகள் குறித்த அழைப்புகள்  8 விழுக்காடு மட்டுமே பெறப்பட்டன.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு நிச்சயமாக தொற்றுநோய் தாக்கத்தால் ஏற்பட்டதாகும்,” என மங்களேஸ்வரி முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட தொலைபேசி நேர்க்காணலில் இவ்வாறு கூறினார்.

“தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தாலும் நாங்கள்  டிஜிட்டல் தகவல்தொடர்பு மூலம் பொது மக்களுடன் இணைந்திருக்கிறோம். பிள்ளைகளைப் பொறுத்தவரை, மின் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவதைத் தவிர, அவர்கள் ஓய்வு நேரங்களில் அதிகமாக இணைய பயன்பாடு சார்ந்த  நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

“அவர்கள் இணையத்தளத்தில், அதிக நேரம் செலவழிக்கும் போது ​​ சமூக ஊடக தளங்களான முகநூல், ‘இன்ஸ்டாகிரம்’, ‘வீசெட்’ மூலம் ஒருவருக்கொருவர் நட்புக் கொள்ள முடிகிறது. 

“இந்த சமூக ஊடக பயன்பாட்டின் மூலம் ஆபத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதேவேளையில், ஆன்லைன் பாலியல்  வேட்டையாடுபவர்களுக்கு இரையாகிறார்கள்.  தொற்றுநோய் தாக்கத்திற்கு முன்னரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் இருந்தன, ஆனால் இப்போது ​​வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான முறையில் அதிகரித்துள்ளன,” என்று மங்களேஸ்வரி கூறினார்.

சமூக சேவையாளரும் நெறியுரைத் துறை நடத்துனருமான மங்களேஸ்வரி, பெற்றோர்கள் சைபர் குற்றச்செயல்கள் பற்றி நன்கு அறிந்து  தங்கள் பிள்ளைகளுக்கு வழிக்காட்ட வேண்டும்.

“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து இணையத்தில்  செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என அவர்களுக்கு நன்கு கற்பிக்க வேண்டும்.

“பெற்றோர்கள் குழந்தைகளிடம் சில விஷயங்கள் ஏன் செய்யக்கூடாது என்பதை  சரியான விளக்கத்துடன் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.  இதனால் இணைய ஆபத்துகள் குறித்து அவர்கள் நன்கு  அறிந்து விழிப்புடன் செயல்பட முடியும்.

“எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

“எங்கள்  தரப்பு மற்றும் காவல்துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பலியான சிறுவர்கள் பெரும்பாலும் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பி.கே.பி அமலாக்கம்  தொடங்கிய பின்னர் இந்த  மையத்திற்கு பெறப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டதாக மங்களேஸ்வரி தெரிவித்தார்.

“வழக்கமாக ஓர் ஆண்டுக்கு 600 முதல் 700 அழைப்புகளைப் பெறுவோம். ஆனால் கடந்த ஆண்டு நாங்கள் பெற்ற 1,156 அழைப்புகளில்  40 விழுக்காடு குடும்ப வன்முறை வழக்குகள் பற்றியதாகும்.
 
பி.கே.பி அமலாக்கத்திற்கு முன்பு, இந்த மையம் ஹாட்லைன் மற்றும் நேருக்கு நேர் சந்திப்பு வழியாக நெரியுரை வழங்கியது. ஆனால்  தற்போதைய சூழலுக்கு ஏற்ப இணைய வீடியோ வாயிலாக நெரியுரை வழங்குவதாக மங்களேஸ்வரி மேலும் கூறினார்.

“சில சமயம், இந்த சேவையின்  நிலையற்ற இணைய இணைப்பு காரணமாக நெறியுரை சேவையில் தடங்கல் நிலவுகிறது.

“மேலும், பி.கே.பி காரணமாக கொடுமை செய்பவரிடம் சிக்கித் தவிப்பதால், அழைப்பாளர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த பாதுகாப்பான இடம் இன்றி தவிக்கின்றனர்.

“நெறியுரைச் சேவையில்  மொத்தம் ஒன்பது சமூக சேவையாளர்கள் எங்கள் அமைப்பில் உள்ளனர்,’’ என மங்களேஸ்வரி தெரிவித்தார்.

இது தவிர, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் தலைமையிலான ‘முதல் ஆதரவு மையம்’ திட்டத்தில் (பினாங்கு பாதுகாப்பான குடும்பக் கொள்கை) பங்கேற்க டபள்யூ.சி.சி மாநில அரசுடன் இணைந்துள்ளது என்று மங்களேஸ்வரி கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு அதிகாரிகள், மாநில பிரதிநிதிகளின் சேவை மைய ஊழியர்கள் மற்றும் சமூக அடிப்படையிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு டபள்யூ.சி.சி பயிற்சி அளித்தது. இதுவரை, நான்கு பயிற்சி பட்டறைகள் வழிநடத்தப்பட்டன.

“மேலும், கூடுதல் பயிற்சி பட்டறைகள் வழி நடத்துவதற்கு மாநில அரசுடன்  ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்,’’ என்று அவர் கூறினார். 

மேலும், உள்நாட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் டபள்யூ.சி.சி-இன் உதவியை நாட தயங்க வேண்டாம்.

டபள்யூ.சி.சி என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுவதோடு பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் செயல்படுகிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மற்றும் இரகசிய 
நெறியுரை வழங்குகிறது.

மேல் விபரங்களுக்கு ஹாட்லைனில் எண்களில் தொடர்புக் கொள்ளவும்: –
டபள்யூ.சி.சி பினாங்கு 011 -3108 4001 / 016-418 0342 அல்லது டபள்யூ.சி.சி

செபராங் / மகளிர் சேவை மையம்
016 439 0698 / 019 410 0698