செபராங் ஜெயா – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் டி.எஸ்.ஏ செபராங் ஜெயா நீச்சல் குளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
டி அகாடமி நீச்சல் குளம் (டி.எஸ்.ஏ) சென்.பெர்ஹாட் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இத்தளத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொண்டு கடந்த ஜனவரி,14 அன்று பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
“அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளால், இது போன்ற திட்டங்கள் உள்ளூர் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நீண்ட காலத்திற்கு விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியை வலுப்படுத்துகிறது,” என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்த நீச்சல் குளம் உள்ளூர் சமூகத்தின் அனைத்து வயதினருக்கும் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்கிறது.
“இந்த மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். மேலும், டி.எஸ்.ஏ நிர்வாகத்தின் கீழ் உள்ள நீச்சல் குளம் சமூகத்தால், குறிப்பாக செபராங் ஜெயாவில் வசிப்பவர்களால் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்,” என்று டி.எஸ்.ஏ நீச்சல் குளம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், டி’ஸ்விம் அகாடமி (டி.எஸ்.ஏ) இளைஞர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீச்சல் துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என அறியப்படுகிறது.
இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென்; ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு அமெச்சூர் நீச்சல் சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இங் சூன் சியாங்; செபராங் பிறை மாநகர் கழகத்தின் மேயர், டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமீத் மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், டி.எஸ்.ஏ செபராங் ஜெயா நீச்சல் குளத்தின் திறப்பு விழா, உள்ளூர் சமூகத்தினர் நீர் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கும் என்று ஜி சென் கூறினார்.
நீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பினாங்குக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதில் நீச்சல் போட்டியும் முக்கியப் பங்கு அளிக்கிறது என்று அவர் கூறினார்.
“இத்திட்டம் ரிம5.5 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்டது. இது நீச்சல் வீரர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் என்று டி.எஸ்.ஏ சென்.பெர்ஹாட் நிறுவனர் மற்றும் இயக்குனருமான சிரேனா யோங் கூறினார்.
“டி’ஸ்விம் அகாடமியால் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீச்சல் குள குழாய் அமைப்பை மேம்படுத்துதல், கட்டிடக் கூரையுடன் சேர்த்து பிரதான குளத்தின் மேல் ஒரு கூரையை அமைத்தல், நுழைவுக் கட்டணக் கவுண்டர், சிற்றுண்டிச்சாலை, ஜிம் மற்றும் கழிப்பறை வசதிகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் ஓய்வெடுக்கும் இடங்கள், நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடம், இரகசிய கண்காணிப்பு கேமரா (CCTV, போன்ற புதிய வசதிகளை வழங்குவதற்கானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டத்தின் கட்டுமானம் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் 2022,ஆகஸ்ட்,1அன்று தொடங்கப்பட்டு 2024 இல் முழுமையாக நிறைவடைந்தது. இந்தக் கட்டுமானச் செலவுகளை டி’ஸ்விம் அகாடமி முழுமையாக ஏற்றுக்கொண்டது.
இந்த நீச்சல் குளத்தில் குளிக்க விரும்பும் பெரியோர்களுக்கு ரிம3.25 மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு ரிம1.10 மட்டுமே தொடக்க நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படுகிறது.
அதேவேளையில், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் ஆகும்.