ஜார்ச்டவுன் – மாநில அரசு ‘தொழில் முனைவர்களுக்கான டிஜிட்டல் மைக்ரோ திட்டத்தின்’ மூலம் தகுதிபெற்ற 350 சிறு தொழில் வியாபாரிகளுக்கு கணினி சன்மானமாக வழங்கப்படும்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், இத்திட்டத்தின் மூலம் சிறு தொழில் வியாபாரிகள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் காலத்தின் தேவைக்கேற்ப டிஜிட்டல் பயன்பாட்டின் மூலம் எல்லையற்ற முறையில் வியாபாரத்தில் ஈடுபடலாம். இதற்கு முன்பு வியாபாரிகள் வியாபார வளாகம் அல்லது கடைகளையே மூலதனமாகக் கொண்டே வியாபாரம் செய்தனர், என்றார்.
“இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில்முனைவர்கள் தங்கள் வியாபார பொருட்களை இணைய வாயிலாகவும் விற்க முடியும் .
“இதன் மூலம் தொழில் முனைவர்களின் டிஜிட்டல் அனுகலை அதிகரிக்கவும் தற்போது கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் ஊன்று கோளாகத் திகழும், என முதல்வர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று நோய் தாக்கம் நடைமுறையில் இருந்த வியாபாரத்தின் வடிவத்தை 100 விழுக்காடு மாற்றியுள்ளது. இது தற்போதைய கோரிக்கைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது.
“கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தொழில் முனைவோர் மேம்பாட்டு போர்ட்போலியோவின் கீழ் 1,300 வணிகர்கள் நன்மை பெற்றுள்ளனர். தொழில் முனைவர்களுக்கான டிஜிட்டல் மைக்ரோ திட்டமானது இ-தொழில் முனைவர்களுக்கான பினாங்கு டிஜிட்டல் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது,” என ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ஹலிம் உசேன் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(பி.டி.சி) கீழ் PEKA பி.கே.எஸ் திட்ட நிதியத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. இத்திட்டம் ரிம320,950.00 நிதி ஒதுக்கீட்டில் 350 கணினிகள் வழங்கப்படும்.
“இத்திட்டம் விவேக மைக்ரோ தொழில்முனைவோரை உருவாக்க உதவுவதோடு, புதிய இயல்பில் இணைய வழி தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும் உதவும். பின்னர் பாரம்பரிய வணிக மாதிரிகளிலிருந்து, டிஜிட்டல் யுகத்தை நோக்கி பயணிக்க துணைபுரியும்.
தகுதிபெற்ற சிறுதொழில் வியாபாரிகள், விண்ணப்ப படிவத்தை www.pdc.gov.my என்ற வலைத்தளத்தில் வருகின்ற நவம்பர்,25 முதல் பதிவிறக்கம் செய்து டிசம்பர், 9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.