ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 23 முதல் வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சின் (கே.பி.கே.தி) கீழ் செயல்படுத்தப்பட்ட நடமாடும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் (MOVAK) வருகின்ற 3/10/2021 நாள் அன்று நிறைவுப்பெறுகிறது.
எனவே வீட்டுவசதி, உள்ளூர் அரசு மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ பினாங்கில் தடுப்பூசி பெற தகுதியுள்ள சிறார்களின் மக்கள்தொகையில் 100 சதவிகிதம் அடையும் வரை இந்த திட்டத்தை தொடர வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் முதல் பள்ளிகளில் நேரடி கற்றல் கற்பித்தல் கட்டம் கட்டமாக தொடங்குவதால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த MOVAK என்பது ஒரு சிறந்த திட்டம் என்று நான் நம்புகிறேன். எனவே, இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம், இது மற்ற பிரிவுகளுக்கும் தொடர வேண்டும்.
“உதாரணமாக, பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் இன்னும் 5,000 பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றால், மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சிறார்களின் வகைக்கு ஏற்ப இந்த திட்டத்தை (MOVAK) எவ்வாறு தொடரலாம் என்று கலந்துரையாட வேண்டும்.
“இன்று முடிவடையும் இந்த திட்டம் (MOVAK), தடுப்பூசி போடத் தகுதியுள்ள அனைத்து சிறார்களும் இரண்டு மருந்தளவு தடுப்பூசி பெறும் வரை தொடர வேண்டும்,” என்று ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் MOVAK 2.0 நிறைவு விழாவில் ஜெக்டிப் இவ்வாறு விளக்கமளித்தார்.
தொடர்ந்து, 2020 செப்டம்பர்,28 தேதியில் அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வக் கடிதத்திற்கு பதில் அளித்த கே.பி.கே.தி அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிகன் நைனா மெரிகானுக்கு ஜெக்டிப் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். தீவு மற்றும் பெருநில மக்களுக்கு இரண்டு வீடமைப்புத் திட்டங்களை வழங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.
“நிச்சயமாக நான் ரீசல் மெரிகன் அமைச்சருடன் முன்மொழியப்பட்ட வீடமைப்புத் திட்ட புதுப்பிப்புத் திட்டத்திற்காக விவாதிப்பேன்.
“தீவு மற்றும் செபராங் பிறையில் இரண்டு பி.பி.ஆர் (மக்கள் வீட்டமைப்புத் திட்டம்) திட்டங்களை வழங்கியதற்கு மிக்க நன்றி,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் தெரிவித்தார்.
மேலும், பினாங்கு மாநில வீடமைப்புப் பராமரிப்புத் திட்டத்திற்கு ரிம175 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்க ஒப்புதல் அளித்ததற்காக அவர் அமைச்சருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அதன் பிறகு பேசிய வீட்டுவசதி மற்றும் ஊராட்சி துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் அப்துல் முத்தலிப், அமைச்சின் மட்டத்தில் MOVAK திட்டத்தைத் தொடர்வதற்கான பரிந்துரையை பரிசீலிக்க விரும்புவதாக கூறினார்.
முன்னதாக, ஜெக்டிப், இஸ்மாயிலுடன் இணைந்து ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெற்ற MOVAK 2.0 நிறைவுத் திட்டத்தை பார்வையிட்டார்.
வேளாண்மை தொழில்நுட்பம் & உணவு பாதுகாப்பு,கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர். நோர்லெலா அரிஃபின்; பினாங்கு மாநகர் கழக மேயர், டத்தோ இயூ துங் சியாங்; செபராங் பிறை மாநகர் கழக மேயர், டத்தோ ரோசாலி மொஹமட் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் துணை பொதுச் செயலாளர் (வீட்டு வசதி மற்றும் சமூக நலன்), டத்தோ அசார் அஹ்மத்; கே.பி.கே.தி நகர நல்வாழ்வு பிரிவின் செயலாளர், டத்தோ முஹம்மது மூசா; அத்துடன் தொடர்புடைய மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.