சிறப்பு வாய்ந்த தை மாதத்தில் நம் இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் விழாக்களில் பொங்கலை அடுத்து முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழா மிக முக்கியம் வாய்ந்ததாகும். எதிர்வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய நிர்வாகம் கடந்த ஜனவரி 13-ஆம் திகதி துப்புரவுப் பணியை மேற்கொண்டது.
ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரம் இருக்கும் தறுவாயில் இத்துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும் என்று ஆலயத் தலைவர் திரு. குவனராஜூ தெரிவித்தார். ஆலய நிர்வாக உறுப்பினர்களும், ஆலயத் தொண்டூழியர்களும், பினாங்கு நகராண்மைக் கழகத் துப்புரவுப் பணியாளர்களும் இந்தத் துப்புரவுப் பணியில் பங்கெடுத்தனர்.
இந்தியாவிற்கு அடுத்த நிலையில் மிகப் பெரிய முருகன் ஆலயத்தைக் கொண்டிருக்கும் பெருமையைப் பினாங்கு மாநிலம் கொண்டுள்ளது. இவ்வாலயம் கடந்த ஆண்டு ஜூன் மாதந்தான் மிகப் பெரிய அளவில் திருக்குட நன்னிராட்டு விழாவைக் கொண்டாடியதை நாம் அறிந்திருப்போம். அவ்வகையில் புதிய ஆலய நிர்மாணிப்பிற்குப் பிறகு முதல் தைப்பூசத்தைக் கொண்டாடவிருக்கும் ஆலயத்தைத் தூய்மை செய்து தயார் செய்வது எங்களின் கடமை என்று ஆலயத் தலைவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து, ஆலய வளாகம் தூய்மையின்றி அசுத்தமாக இருப்பதாகப் பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இதனைப் பற்றி ஆலயத் தலைவரிடம் வினவியபோது, ஆலய சுற்றுப்புறத்தில் சில சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் சிரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கற்கள், சிமிட்டி மூட்டைகள் போன்றவை ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்பதால் ஆலயம் சற்று தூய்மையின்றி காட்சியளிக்கிறது என்று தெளிவுறுத்தினார். இச்சீரமைப்புப் பணியால் அதிக அளவில் சேரும் குப்பைகளை அடிக்கடி மேற்தளத்திலிருந்து கீழ்த்தளத்திற்குக் கொண்டு செல்ல இயலாததால் அவை ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்கப்பட்டு குப்பைகள் நிறைய சேர்ந்தவுடன் அவை பார உந்தின் மூலம் கீழ்த் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்படும். எனவே, பொது மக்கள் ஆலயத்தின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்வார்கள் என்று திரு குவனராஜு நம்பிக்கை தெரிவித்தார். எவ்வாறாயினும் தைப்பூசத்திற்குள் ஆலய வளாகத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றார்.
பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் திரு பிரேம் ஆனந்த் தலைமையில் சுமார் 30 நகராண்மைக் கழகத் துப்புரவு பணியாளர்கள் ஆலயத்தைத் தூய்மை செய்யும் நோக்கில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். காய்ந்த மரக்கிளைகள், இலைகளை வெட்டுதல், கால்வாய்களைச் சுத்தம் செய்தல், ஆலயப் படிகளைப் பெருக்குதல், காய்ந்த புற்களை அகற்றுதல் போன்றவை அவற்றுள் அடங்கும். இவர்களோடு, ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் அவர்களும் துப்புரவுக் களத்தில் இறங்கினார்.. சிறிது நேரம் காய்ந்த புற்களை பெருக்கிய திரு இராயர் அவர்கள் துப்புரவுப் பணி என்பது சுலபமான ஒன்றல்ல. அது மிகவும் சவால் மிக்க பணி என்று கருத்துரைத்தார். கடுமையான வெயிலிலும் முழு ஈடுபாட்டுடன் ஆலயத்தைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் தம் பாரட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் காய்ந்த புற்களை அகற்றுகிறார்.
514 படிகளைக் கொண்டு புதிதாய் நிர்மாணிக்கப்பட்டுள்ள பினாங்கு அருள்மிகு தண்டாயுதபாணி மலைக் கோவிலைக் காண இவ்வாண்டு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏறக்குறைய 1 கோடி மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், பொதுமக்கள் சிறப்பான முறையில் கந்தப் பெருமானுக்குத் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி தைப்பூசத் திருநாளை இனிதே கொண்டாட தம் வாழ்த்துகளையும் ஆலயத் தலைவர் திரு குவனராஜு தெரிவித்துக் கொண்டார்.
கால்வாய்களைத் தூய்மை படுத்தும் பினாங்கு நகராண்மைக் கழகத் துப்புரவுப் பணியாளர்கள்.