பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்காக ரி.ம 3 லட்சம் நன்கொடையாக வழங்குவதாகத் தைப்பூசத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி முதல்வர் லிம் இந்நிதிக்கான காசோலையை ஆலயத் தலைவர் திரு. குவனராஜுவிடம் கடந்த பிப்ரவரி 4-அம் திகதி கொம்தாரில் வழங்கினார்.
இந்திய நாட்டை விடுத்து மிகப் பெரிய முருகன் ஆலயமாகப் பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைவது சாலச்சிறந்தது என முதல்வர் தம் உரையில் குறிப்பிட்டார். மக்கள் கூட்டணி அரசு இதுவரை இத்திருத்தலத்தின் திருப்பணிக்காக ரிம 7 லட்சம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூசத் திருவிழா அன்று முதல்வர் வழங்கிய வாக்குறுதி ஒரு வார காலக்கட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாகக் ஆலயத் தலைவர் குறிப்பிட்டார். இந்நிதியுதவி வழங்கிய மாநில அரசாங்கத்திற்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் கோவிலின் திருப்பணி முழுமை பெறுவதற்கு இன்னும் ரிம 2 லட்சம் நிதியுதவி தேவைப்படுவதாகக் கூறினார். இத்தைப்பூசத் திருவிழா சிறப்பான வகையில் அமைய வழி வகுத்த கோவில் நிர்வாகத்தினருக்கும் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இரண்டாம் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் ப.இராமசாமி தம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு குவனராஜு மாநில அரசுக்குத் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறார். அருகில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி.