தனியார் நிறுவனங்கள் மறுசுழற்சி திட்டத்தில் பங்கெடுக்க முன்வர வேண்டும் – டத்தோ ரோசாலி

Admin

புக்கிட் மெர்தாஜாம் – செபராங் பிறை மாநகர் கழகம் பொருளாதார சுற்றறிக்கை திட்டத்தை வலுப்படுத்த பல திட்டங்களை வகுத்து வருகின்றது. 2022-ஆம் ஆண்டு குறைந்த கார்பன் நகரமாகவும், ஜனவரி 2020 முதல் 10 ஆண்டுகளில் கார்பன் நடுநிலை நகரமாகவும் (2030), 2050-ஆம் ஆண்டில் ஜீரோ கார்பன் நகரமாக (பூஜ்ஜிய கார்பன்) மாறும் முயற்சிகளை வலுப்படுத்துவதையும் இந்த பொருளாதார திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என செபராங் பிறை மாநகர் கழகத்தில் நடைபெற்ற மறுசுழற்சி துணி மீதங்கள் வழங்கும் திட்டத்தில் அதன் மேயர் டத்தோ ரோசாலி மாமுட் செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.

சவுத் ஐலன்ட் கார்மென்ட் சென்.பெர்ஹாட் எனும் தனியார் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட துணி மீதங்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கு வழங்குகின்றனர். இந்த துணி மீதங்கள் கொண்டு பொருட்களைத் தயாரிப்பதற்காக வழங்கப்படுகிறது. அத்துணிகளை கொண்டு கைப்பை, போர்வைகள், தலையணைகள், விரிப்புகள் அல்லது கால் மிதி போன்ற கையால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கி அதனை சந்தையில் விற்கப்படுகின்றன.


சவுத் ஐலன்ட் கார்மென்ட் நிறுவனத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு சுமார் 180 கிலோ கிராம் துணி மீதங்கள் ‘upcycle’ திட்டத்தில் பங்குபெறும் தரப்பினருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெர்மடாங் நிபோங் பெர்ஹாட் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டுறவு, கெபாலா காஜா மக்கள் கழகம், ஜாவி மகளிர் அணி, திருமதி. அஸ்னி ஓத்மான், திருமதி ஓயோ குவாட் டின் மற்றும் திருமதி செவ் ஸ்வீ கியோ ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

இந்த கைவினைப் பொருட்களை சந்தையில் விற்பதற்கு ஆட்டோசிட்டியில் ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையிலும் மற்றும் ‘குரோத் சந்தையில்’ மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் இலவசமாக இடம் அளிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிந்த பின்னர் டிசைன் வில்லேச் பேரங்காடியிலும் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்த கைவினைப் பொருட்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மேயர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

“தொழில்துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க இம்மாதிரியான பசுமை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சவுத் ஐலன்ட் கார்மன் நிறுவனத்தை பிற தனியார் நிறுவனங்களும் முன்னோடியாக கொண்டு இம்மாதிரியான திட்டங்களில் பங்கெடுக்க முன்வர வேண்டும். இதன் மூலம், 2022-ஆம் ஆண்டில் குறைந்த கார்பன் நகரமாக மாற வேண்டும் என்ற எம்.பி.எஸ்.பி-இன் குறிக்கோளுக்கு ஏற்ப சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதனை நேசிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான தொடக்கப் புள்ளியாக இத்திட்டம் அமையும், என மேயர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மறுசுழற்சி அதிகரிக்கவும், கழிவுகளைக் குறைக்கவும் தென், மத்திய மற்றும் வட செபராங் பிறையை சார்ந்த அனைத்து சமூகங்கள் மற்றும் தனியார் (தொழில்துறை) துறைகளின் ஒத்துழைப்பு அவசியம். 8R கொள்கைகளான மறுபரிசீலனை; குறைத்தல்; மறு பயன்பாடு; பழுதுப்பார்த்தல்; மறு பரிசளித்தல்; மீட்சி நிலை; மற்றும் மறுசுழற்சி ஆகிய கோட்பாடுகளை அமல்படுத்துவது செபராங் பிறையை அனைத்துலக ரீதியில் பிரசித்தி பெற வழிவகுக்கும்.

இத்திட்டத்தில் பங்கெடுத்த ஜாவி மகளிர் அணியை சேர்ந்த திலகவதி த/பெ வேலாயுதம் கடந்த ஓராண்டு மேலாக இதில் பங்கெடுப்பதாக முத்துச் செய்திகள் நாளிதழ் நேர்காணலில் குறிப்பிட்டார். “இது ஒரு நல்ல திட்டம்; ஆர்வமுள்ள தனித்து வாழும் தாய்மார்கள் இதில் அவசியம் பங்கெடுக்க முன்வர வேண்டும்; இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்”, என வலியுறுத்தினார்.இன்று பெறப்பட்ட இத்துணிகளை கொண்டு வாகன நாற்காலி உறைகளைத் தைத்து அதனை மின்னியல் முறையில் விற்கப்படும். 15 பேர் கொண்ட இக்குழு உறுப்பினர்கள் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தில் தனித்து வாழும் தாய்மார்களின் பிள்ளைகளின் கல்விக்கு நிதியுதவி வழங்குவதாகவும் கூறினார்.