பிறை – ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மலேசிய இந்து தர்மம் மாமன்றம், பினாங்கு மாநில ஏற்பாட்டில் 6-வது முறையாக அடிப்படை இந்து தர்ம ஆசிரியர் பயிலரங்கம் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இந்துதர்ம ஆசிரியர் பயிலரங்கம் கடந்த இரண்டு நாட்களுக்கு நடைபெற்றன .
இந்த பயிலரங்க நிறைவு விழாவின் போது பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன்; மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதகிருஷ்ணன்; மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் மாநிலத் தலைவர் ந. தனபாலன் ; பிறை ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபால கிருஷ்ணன்; துணைத் தலைவர் மேஜார் சேகரன்; மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதகிருஷ்ணன் தலைமையில் ஆறு இந்து சமய போதகர்கள் இந்து சமய போதனைகளின் அடிப்படை பயிற்சிகளை வழங்கி பங்கேற்பாளர்களுக்கு வழிக்காட்டினர்.
தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய அடிப்படையிலான பாட போதனைகளை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்திருப்பதாகவும், இம்முறை ஆசிரியர்கள் மட்டுமின்றி பொது மக்கள் , இல்லதரசிகள், புதிய ஆசிரியர்களும் பங்குக் கொண்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டு குழுத் தலைவருமான க. மாணிக்கம் கூறினார் .
2015 ஆண்டு தொடங்கி இந்த சமயப் போதனை பயிலரங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஆசிரியர்களுக்கான ஊதியமும் 2016ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் வழங்கி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு தொடங்கி மித்ரா , ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இணை ஆதரவில் ஆசிரியர்களுக்கு ஊதியங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார் .
இந்த ஆலயம் மக்களுக்கு சேவை மையமாக திகழ்வதாகவும் ஆலயத் தலைவர் டத்தோ கோபால கிருஷ்ணன் கூறினார் . பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோவிட்-19 தொற்று நோய் காலகட்டத்தில் கூட பல சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார் .
ஆலயத்திற்கு தூண்களாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இருந்து வருவதாக கூறிய அவர் ஆலயத்திற்கு வாகனம் நிறுத்துமிடம் சமீபத்தில் அதற்கான இடம் கிடைத்துள்ளதாகவும் ஒவ்வொரு திட்டங்களுக்கு பினாங்கு மாநில இரண்டாம் துணைமுதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் டத்தோ இராமசந்திரன் துணையாக நின்று செயல்லாற்றுவதாக அவர் கூறினார் .
“தமிழ்ப்பள்ளிகளில் இந்து மத போதனை போதிக்கும் அடிப்படை பாட புத்தகங்களை
மலேசிய இந்து தர்ம மாமன்றம் தயாரித்துள்ளது. மேலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களுக்குப் போதிப்பதாக,” மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் மாநிலத் தலைவர் ந. தனபாலன்
கூறினார் .
இந்து மத பாட போதனைகள் 1,2,3,4 மற்றும் 5 ஆம் ஆண்டு பயிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் சமய அடிப்படையிலான புதிர் போட்டிகளும் மாநில அளவில் தமிழ்ப்பள்ளிகளிடையே ஆலயம் ஏற்று நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார் .
சிறப்புரையாற்றிய டத்தோ இராமசந்திரன் தமதுரையில் தற்போது மத மாற்றம் சம்பவங்கள் மிகவும் அதிகரிப்பதாகவும் கூறினார். நம்மிடையே இருக்கின்ற ஏழ்மை நிலையை அறிந்து உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் மத மாற்றம் சம்பவங்களும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன . இதனை நாம் முற்றாக துடைத்தொழித்திட வேண்டும் . வறுமையினால் மதம் மாறுவதா? தங்களின் பிரச்சனைகளை களைவதற்குத் தேவையான துறைகள் இங்கு இருக்கும் போது அதனை விடுத்து தேவையற்ற விளம்பரங்கள் செய்து தங்களையும் நம் இனத்தையும் ஏன் பிறர் கேலியாக பேசும் அளவிற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார் .
நம் சமுதாயத்தின் நிலவரங்களை அறிந்து அரசு சாரா இயக்கங்களும் செயல் பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் மலேசிய இந்து தர்ம மாமன்றம் நடவடிக்கைகள் மிக சிறப்பாக இருப்பதாகவும், மாணவர்கள் அடிப்படை சமயப் போதனையை ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டக்குரியதாகும். இந்த முயற்சி வருங்காலத்திலும் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார் .