“பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு தொடங்கி இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை இன்னும் மேன்மையடையச் செய்யும் நோக்கில் இன்று ஜோர்ச்டவுனில் அமைந்துள்ள ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்பறையை தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி .
பினாங்கு தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு சிறப்பு நிதியத்தின் மூலம் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியில் புதிய கணினி வகுப்பறை மாநில அரசு அமைந்துள்ளதை தமதுரையில் குறிப்பிட்டார் மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலனதன வளர்ச்சி மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் இராமசாமி.
மேலும், இக்கணினி வகுப்பறையில் 15 கணினிகள் பிரத்தியேகமாக மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளிகளில் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மற்றும் கற்பித்தல் திட்டத்தை தொடர்ந்து இன்னும் ஐந்தாண்டுகளில் மெய்ப்பிக்க மாநில அரசும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு குழுவும் தொடர்ந்து அயராது பாடுப்படும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சூளுரைத்தார்.
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகள் கல்வி மற்றும் போட்டி விளையாட்டுகளில் பீடுநடை போட அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தர தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இப்பள்ளிக்கு கணினிகள் வழங்கப்பட்ட போதிலும் இங்கு கணினி வகுப்பறை இல்லாமல் இருந்ததை நிவர்த்திச் செய்யும் வகையில் இவ்வாண்டு இத்தமிழ்ப்பள்ளி கணினி வகுப்பறை கட்டப்பட்டதாக தமதுரையில் குறிப்பிட்டார் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு பணிக்குழு தலைவர் டத்தோ அன்பழகன்.