தமிழ்ப்பள்ளிகள் சிறந்த வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளது – குமரன்

Admin
mak mandin 3

பட்டர்வொர்த் – தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் 50-ஆம் ஆண்டுப் பொன்விழா கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

பாகான் நாடாளுமன்ற தொகுதியில்  அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளியான மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள  புதிய பல்நோக்கு  மண்டபத்தில் நடந்தேறிய 50 ஆண்டு பொன்விழாவின் நிகழ்ச்சி அனைவரின் இதயங்களிலும் பழைய நினைவுகளை கொண்டு வந்தது.

இப்பள்ளியின் முன்னோட்ட வரலாறு பட்டர்வொர்த்தில் இரு தளத்தில் இருந்து தொடங்கினாலும் 1973 ஆம் ஆண்டு புதிய அத்தியாயத்தோடும், புதியப் பெயரோடும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது என்பது வரலாற்றுச் சுருக்கம்.  இப்பள்ளியின் ஆதரவாளர்களின் விடா முயற்சியால்   1994 ஆம் ஆண்டு சொந்த கட்டடத்தை கண்டது.

 

தமிழ்ப்பள்ளியில் நடந்த பொன்விழா கொண்டாட்டத்தில் 1973 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் இன்னாள்  மாணவர்கள்  வருகை தந்து தங்களின் முன்னாள் ஆசிரியர்களையும் பள்ளியில் ஒன்றாக பயின்ற சக மாணவர்களையும்  சந்தித்துக்கொண்ட தருணம் மகிழ்ச்சியின் எல்லை என்றே கூறலாம்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பள்ளியின் மேலாளர்  வாரியக்குழு தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டி.புவனேஸ்வரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் யுவராஜன் பூபாலன்வ் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் நடப்புத் தலைமை ஆசிரியர் ந.குணாசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து ஆதரவை நல்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் வணிகம் மற்றும் தொழில் உலகில் வெற்றி பெற்ற இந்த தமிழ்ப்பள்ளியின் சில முன்னாள் மாணவர்களை சந்தித்ததில் தமிழ்ப்பள்ளிகள் பின்தங்கியிருக்கவில்லை என்பதையும், நல்ல பண்பும் உயர் அறிவும் கொண்ட வெற்றிகரமான பினாங்குக் குழந்தைகளை உருவாக்கியுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது என்றார்.

mak mandin 2

 

மேலும், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரனும் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பல்நோக்கு விளையாட்டு மையத்தை அமைக்க ரிம70,000 மானியம் வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.

 

பினாங்கு மாநில அரசு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு திடல் அமைக்கவும் பல்நோக்கு மண்டபம் அமைக்கவும் நிலம் ஒதுக்கீடு வழங்கியிருப்பது மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பதை நிரூபிக்கிறது.