பிறை – ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய ஏற்பாட்டில் 2018-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் அரசு தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்வினை அவ்வாலய நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
மேலும், இந்நிகழ்வில் பிறை தமிழ்ப்பள்ளி மற்றும் பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிச்சீருடையும் நன்கொடையாக வழங்கப்பட்டன.இந்நிகழ்வினில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியை பிரதிநிதித்து பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன் சிறப்பு வருகை மேற்கொண்டார்.
ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் திறன்மிக்க நிர்வாகத்தால் இந்திய மக்களுக்கு உதவிகளையும் தொண்டுகளும் ஆற்றி வருவதை பாராட்டினார் டத்தோ இராமசந்திரன். யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டதோடு தமிழ்ப்பள்ளிகள் இன்னும் வரும்காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சிங்காரவேலு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியை பிரதிநிதித்து இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறினார். இந்திய மாணவர்களுக்கு வழங்கும் இம்மாதிரியான அங்கீகாரம் எதிர்காலத்தில் பிற மாணவர்களுக்கு சிறப்பு தேர்ச்சிப் பெற ஊந்துகோலாக அமையும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
பினாங்கில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகின்றனர் என புகழ்மாலை சூட்டினார் டத்தோ கோபாலகிருஷ்ணன். மாணவர்கள் கல்வியில் வெற்றிப்பெற பெற்றோர்களின் கண்காணிப்பும் ஆசிரியர்களின் அரவணைப்பும் மிக அவசியம் என குறிப்பிட்டார்.