அண்மையில் “சூழல் நட்பு தெர்மோ கொள்கலனை” மறுபயனீட்டுப் பொருள்களின் வழி புத்தாக்க முறையில் தயாரித்து மாவட்டம், மாநிலம், தேசியம், ஆசியா இறுதியில் அனைத்துலக அறிவியல் விழாவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்தனர் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களான ஶ்ரீ.துர்காஷினி, பொ.குமுதாஶ்ரீ மற்றும் க.சுகேசன். இம்மூன்று மாணவர்களின் சாதனை தமிழ்ப்பள்ளிக்கு மட்டுமின்றி பினாங்கு மாநிலத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளது என அகம் மகிழ தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். தமிழ்ப்பள்ளி மாணவர்களும் திறன்மிக்கவர்கள் என்றும் அவர்கள் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் என்றார்.
அனைத்துலக அறிவியல் விழாவில் தங்கம் வென்ற மூன்று மாணவர்களையும் பினாங்கு மாநிலம் நற்சான்றிதழ் வழங்கி அங்கீகரித்ததோடு பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கி கொளரவித்தது. பினாங்கு இந்து அறப்பணி சார்பில் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மூன்று மாணவர்களுக்கும் முறையே மடிக்கணினி மற்றும் ரிம1,000 ரொக்கப்பணம் மாநில முதல்வர் லிம் குவான் எங் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வழங்கி சிறப்பித்தனர். மேலும் மாணவர்கள் வெற்றிப்பெற தூண்டுக்கோளாக விளங்கிய அப்பள்ளியின் ஆசிரியர்களான திருமதி மாரியாய் மற்றும் திருமதி லுய்ஸ் மேரி அவர்களுக்கும் இந்து அறப்பணி வாரிய சார்பில் மடிக்கணினி மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டன .
கடந்த 20/3/2015 முதல் 26/3/2015 வரையில், சீன பெய்ஜிங் நகரில் நடைபெற்ற 35-வது இளையோர் அறிவியல் புத்தாக்கப் போட்டியில், 30 நாடுகளைச் சார்ந்த மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தங்கப் பதக்கம் வென்ற இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களான இவர்கள், இதற்கு முன் பல போட்டிகளில் கலந்துகொண்டு அறிவியல் பூர்வமான பல அரியக் கண்டுப்பிடிப்புகளைச் செய்துகாட்டி முதல் பரிசுகள் மற்றும் சிறப்புப் பரிசுகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநில அரசு திறமையானவர்களைப் பாராட்டுவதில் பாரபட்சம் காட்டாது என்றும், திறமைசாலிகள் என்றும் அங்கீகரிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப. இராமசாமி . பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் நடைபெற்ற அறிவியல் சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு பரிசளிப்பு விழாவில் இந்திய தூதரக ஆலோசகர் திரு ரஜிவ் அஹிர் உட்பட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும் இந்து அறப்பணி துணைத் தலைவருமான திரு தனசேகரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். பினாங்கு இந்திய தூதரக சார்பில் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ்மொழி புத்தகங்கள் எடுத்து வழங்கப்பட்டன.
} else {