பாகான் ஜெர்மால், தாமான் கெராபுவில் உள்ள மூன்று பம்ப் ஹவுஸ்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வின் முதல் கட்டம் அடுத்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ் பி) இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான
வடிவமைப்பைத் தயாரிக்கவும் அதனைச் செயல்படுத்தவும் ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகிறது என
பராமரிப்பு அரசாங்கத்தின் பினாங்கு இளைஞர் மற்றும் விளையாட்டு
ஆட்சிக்குழுத் தலைவர் சூன் லிப் சீ கூறினார்.
“மாநிலத் தேர்தல் முடிவடைந்ததும் அதனைத் தொடர்ந்து, முதல் கட்ட அறிக்கை ஆகஸ்ட் மாதம் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
“அதன்பிறகு, இந்த மேம்பாட்டு திட்டத்திற்கான சுமார் ரிம6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு இறுதியாக அங்கீகரிப்பதற்கு முன்னதாக, இன்னும் சாத்தியக்கூறு ஆய்வு சில கட்டங்களாக நடத்தப்படும்.
“கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தாமான் கெராபுவில் உள்ள மூன்று பம்ப் ஹவுஸ்களை மேம்படுத்தும் திட்டம் மிக முக்கியமானது.
“எனவே, இந்த திட்டம் சுமூகமாகவும் விரைவில் நிறைவேற்றப்படுவதைவும் உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று பாகான் ஜெர்மாலில் உள்ள தாமான் கெராபுவில் உள்ள மூன்று பம்ப் ஹவுஸ்களில் ஒன்றை அவர் பார்வையிட்டபோது செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் எங் ஈ சியாங், எம்.பி.கே.கே பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தரப்பினர் உடன் வருகையளித்தனர்.
சூன் கூற்றுப்படி, தாமான் கெராபுவின் தொழில்துறை மண்டலத்தில் உள்ளவர்கள் உட்பட அப்பகுதியில் வசிக்கும் மொத்தம் 1,500 குடியிருப்பாளர்கள் இந்த மேம்பாட்டு திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.