தாமான் தெருக்கூர் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் – சுந்தராஜு

Admin
img 20240625 wa0056

ஜாவி – நிபோங் திபாலில் உள்ள தாமான் தெருக்கூர் இண்டா பிளாக் ‘A’ இல் கூடிய விரைவில் வடிக்கால் மேம்படுத்துதல் மற்றும் சாலைகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த வாழ்க்கை சூழலை ஏற்படுத்தக்கூடும்.

இத்திட்டத்தின் மொத்த செலவினம் ரிம115,400 என மதிப்பிடப்பட்டுள்ளது, என்று மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறினார்.

“இந்தத் தொகையில், ரிம23,088 அதாவது 20% மாநில அரசு ஏற்கும், அதேவேளையில் 80% அதன் அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்தால் நிதியளிக்கப்படும்.

” நாங்கள் கட்டிடம் தொடர்பான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது மட்டுமே 80% செலவை ஏற்கிறோம்,” என்று அவர் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

ஐந்து புலோக்குகளுடன் 78 யூனிட்களைக் கொண்ட இந்த தாமான் தெருக்கூர் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று சுந்தராஜு கூறினார்.

“குடிமக்கள் வசதியான சூழலில் தங்குவதை உறுதிசெய்வதற்கு இத்திட்டத்தை மேற்கொள்வது எங்கள் கடமையாகும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியிருப்பாளர்கள் வசதியாக வாழ முடியும் என சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜாவி சட்டமன்ற உறுப்பினருமான ஜேசன் ஹெங் மூய் லாய், குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததற்காக ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு மற்றும் மாநில வீட்டு வசதி வாரியத்திற்கு நன்றித் தெரிவித்தார்.
“நாங்கள் எப்பொழுதும் மக்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவர்களின் சமூக நலன் மீது அக்கறைக் கொண்டு அதற்குத் தீர்வுக் காண முற்படுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

2008 ஆண்டு முதல் 2024 ஜூன்,25 வரை, மாநில அரசு பினாங்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வீடமைப்புப் பராமரிப்பு திட்டங்களுக்காக (36,635 பராமரிப்புப் பணிகள்) ரிம372.39 மில்லியன் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.