தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு திட்டப் பிரச்சனைக்குத் தீர்வுக்காணப்பட்டது – ஜெக்டிப் சிங்

படம்1: தாமான் ஸ்ரீ சயாங் குடியிருப்புவாசிகளுக்கு மாதிரி சாவியை வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள்.
படம்1: தாமான் ஸ்ரீ சயாங் குடியிருப்புவாசிகளுக்கு மாதிரி சாவியை வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள்.

பாலேக் புலாவில் உள்ள தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு திட்டம் கடந்த 2000-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம் 3 கட்டமாக நிறுவப்படும் என தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்கள் சிலர் அத்திட்டத்தில் வீடுகளை வாங்கினர். ஆனால், மேம்பாட்டாளர்கள் இந்த வீடமைப்பு திட்டத்தை முழுமைப் பெறாமல் நிறுத்திவிட்டனர். இச்சம்பவத்தை அறிந்த வீடுகளை வாங்கியவர்கள் மேம்பாட்டாளரிடம் முறையிட்டனர். எனினும், எவ்வித மாற்றமும் நிகழவில்லை. 14 ஆண்டுகள் உருண்டோடிய பிறகு 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீடுகளை வாங்கியவர்கள் மாநில அரசின் உதவியை நாடினர். கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் இப்பிரச்சனைக்கு தாம் தீர்வுக்காணுவதாக அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர், மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் அவர்கள் அந்த தனியார் நிறுவனத்துடனும் வாங்குநர் உடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்பேச்சு வார்த்தை இரண்டு தரப்பினரிடம் குறைந்தது ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்டது. இதன் வெற்றியாக கடந்த 30 நவம்பர் 2014 ஆம் நாள் வாங்குநர் அனைவருக்கும் வீட்டு சாவிகள் வழங்கப்பட்டன. 14 கடை வீடுகள், 11 இரட்டை மாடி வீடுகள் மற்றும் 38 யூனிட்கள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் என மொத்தமாக 63 வீடுகள் இத்திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. இப்பிரச்சனைக்கு சிறப்பு தூதராக இருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் அவர்கள் தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு பிரச்சனைக்கு தீர்வுக்கண்டதை எண்ணி அகம் மகிழ்ந்தார். அவ்வேளையில் அவரின் தந்தையான காலஞ்சென்ற கர்பால் சிங் அவர்கள் ஜெக்டிப்பிடம் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் பெற்றுதர முழு மூச்சாக சேவையாற்ற வேண்டும் என்ற அன்னாரின் கூற்றுகளை நினைவுக்கூர்ந்தார். இதனிடையே, மஜிஸ்ட்ரேட் ஹட்ஸ் வீடமைப்பு பிரச்சனைக்கும் தாம் விரைவில் தீர்வுக்காணவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் அவர்கள்.

படம் 2: புதிதாக கட்டப்பட்ட கடை வரிசை வீடுகள்
படம் 2: புதிதாக கட்டப்பட்ட கடை வரிசை வீடுகள்

தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு வாங்குநர்கள் பினாங்கு மாநில அரசிற்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர். தங்களின் வீடுகள் நினைவாக இருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அவர்களுக்கும் நன்றி பாமாலை சூட்டினர்.