நம் முன்னோர்களின் பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் கடந்து இன்று நாம் விடுதலை பூமியில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் சிந்திய வியர்வைகளும் குருதிகளும்தான் இன்று நம்மைச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்திருக்கின்றன. 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் திகதி பல இன்னல்களைத் தாண்டி ஆங்கிலேயர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த விடுதலை நாளை நினைவுகூர்ந்து, அரசாங்கத் தலைவர்கள் உட்பட குடிமக்கள் யாவரும் இம்மண்ணின் அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு மாநிலம் விடுதலை நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மலேசியக் கொடிகளைப் பறக்கவிட்டு தேசிய தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிடும். ஓர் அதிகாரப்பூர்வ நிகழ்வில் அரசாங்கத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மக்கள் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் விடுதலை நாள் கொண்டாட்டத்தின் துவக்கமாக மலேசியக் கொடிகளை வழங்குவர். அவ்வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூலை 12-ஆம் திகதி சன்வேய் கர்னிவலில் நடைபெற்ற இவ்விழாவினை ஏற்பாட்டுக் குழுத் தலைவரான பினாங்கு மாநிலச் சட்டச்சபை சபாநாயகர் டத்தோ அப்துல் ஹலிம் அவர்கள் தலைமையேற்றுப் பங்கேற்பாளர்களுக்கு மலேசியக் கொடிகளை வழங்கினார். இவ்விழாவில், பெருமதிப்பிற்குரிய மாநில முதல்வர் திரு லிம் குவான் எங், துணை முதல்வர்கள் டத்தோ மன்சோர் ஒஸ்மான் மற்றும் பேராசிரியர் ப. இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர் டத்தோ ஃபாரிசான் டாருஸ் மற்றும் பல தலைவர்கள் கலந்து சிறப்புச் சேர்த்தனர்.
மக்கள் கூட்டணியின் உயர் மட்டத் தலைவர்கள் யாவரும் ஒருமித்த கருத்தோடு ‘ஒரே இனம்; ஒரே நாடு, ஒரே ஆன்மா’ என்னும் சுலோகத்தை இவ்வாண்டின் விடுதலை நாள் மற்றும் மலேசியா நாள் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தனர். மக்கள் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இல்லை என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டை துடைத்தொழித்து தங்களுக்குள் ஒருமைப்பாடு ஓங்கி நிற்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மான் ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார். நாடு 55-ஆவது ஆண்டு விடுதலை நாளை எட்டியிருந்தாலும் மக்களின் செயற்பாட்டை உணர நாம் நம் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமன்றி தேசியக் கோட்பாடுகளைப் பின்பற்றி மக்களின் பொதுநலத்தையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தம் உரையில் வலியுறுத்தினார். தேசியக் கோட்பாடுகளை நினைவுகூர்வோம்:
- இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
- பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
- அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
- சட்டம் முறைப்படி ஆட்சி நடத்துதல்
- நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மேலும், மலேசியாவின் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாகத் திகழ்வது நாட்டில் பெருக்கெடுத்து ஓடும் ஊழற் செயல்தான். ஒரு மேம்பாடடைந்த நாடாக மலேசியாவை உருவாக்குவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை இந்த ஊழல்தான் பாழாக்குகிறது. அதுமட்டுமல்லாது இந்த ஊழல் நோய் பொருளாதாரம், அரசியல் மட்டுமின்றி விளையாட்டு, பொதுநலம் போன்ற சமூகத் துறைகளில் சுயமரியாதையுடன் வாழும் மலேசியர்களை வலுவிழக்கச் செய்கிறது என்று முதல்வர் லிம் குவான் எங் வருத்தத்துடன் கூறினார்.
மலேசிய மக்கள் நீதி, சுதந்திரம், சம வாய்ப்புகள், ஆரோக்கியமான போட்டி, ஒற்றுமை ஆகிய பொதுப் பண்புகளைக் கொண்டு ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் வெறும் கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் மட்டும் சலுகைகளை வழங்காமல் திறன்மிக்கவர்களோ திறன் இல்லாதவர்களோ ஏழையோ பணக்காரரோ யாவரும் தங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளவும் கௌரமாக வாழவும் வழிவகை செய்ய முடியும் என முதல்வர் தம் விடுதலை நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், எதிர்கால மேன்மையை உறுதி செய்ய மலேசியா மனிதத் திறனை மட்டும் முதலீடாகக் கொள்ளாமல் ஆற்றலுக்கும் வாய்ப்புக்கும் ஏற்றாற்போல் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தம் விடுதலை நாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டார்.
விடுதலை நாள் கொண்டாட்டத்தை மக்களுடன் சேர்ந்து தொடக்கி வைக்க கடந்த ஆக்ஸ்ட் 30-ஆம் திகதி ஆட்சிகுழு உறுப்பினர்களான திரு சாவ் கொன் யாவ், திரு எங் வெய் எக், திரு லாவ் கெங் ஈ ஆகியோர் சாவ்ரஸ்தா சந்தைக்கு வருகை மேற்கொண்டனர். இவ்வாண்டு பினாங்கில் விடுதலை நாள் கொண்டாடுவதற்கான சூழல் அமர்க்களமாக இல்லை என திரு சாவ் வருத்தம் தெரிவித்தார். அச்சூழலை மாற்றி மக்களை விடுதலை நாள் கொண்டாட்டத்தில் திளைக்க வைக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுமார் 1000 கையசை கொடிகளை மக்களுக்கும் 100 தொங்கு கொடிகளை சாவ்ரஸ்தா சந்தையோரக் கடைகளின் உரிமையாளர்களுக்கும் வழங்கி உற்சாகமூட்டினர். மக்கள் இந்த(த்) சேசிய தினத்தை நாட்டுப் பற்றோடு கொண்டாட வேண்டும். மலேசிய நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என மூவரும் வலியுறுத்தினர்.
மலாய்க்காரர், சீனர், இந்தியர் என்பது மூவினம்
மலேசியர் என்பது ஓரினம் – எனவே
வேற்றுமையைத் தூக்கி எறி
வெற்றிக் கொடியைத் தூக்கிப் பிடி!