பந்தாய் ஜெராஜா – பினாங்கு மாநில முதலமைச்சரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் ஏறக்குறைய 10,000 விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கிடையில், விழாவில் மாநில ஆளுநர் (TYT), துன் அஹ்மத் புஜி அப்துல் ரசாக் அவரது மனைவி தோஹ் புவான் கத்தீஜா முகமது நீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறந்த இல்ல உபசரிப்பு போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதன் மூலம் மாநில அரசாங்கத் தலைமையுடன் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் நல்லிணக்கத்தைப் பேணுவதை நன்கு சித்தரிக்கின்றது என மாநில முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
“சீனப் புத்தாண்டு மட்டுமல்ல, மற்ற பண்டிகைகளையும் பொது மக்கள், மாநிலத் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள் என்பதைக் காட்ட இந்த திறந்த இல்ல உபசரிப்பு பொருத்தமான உதாரணமாகும்.
“இது பினாங்கு மாநிலத்தை மேம்படுத்த பொது மக்கள் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் முயற்சியைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், மாநில சட்டமன்ற சபாநாயகர் , டத்தோ லாவ் சூ கியாங்; முன்னாள் முதலமைச்சரும் ஆயிர் புத்தே மாநில சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்; மாநில அரசு செயலாளர், டத்தோ ரோஸ்லி இசா; மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; சட்டமன்ற உறுப்பினர்கள்; பினாங்கு மாநகர் கழக மேயர், டத்தோ Ir. இராஜேந்திரன்; மாநில மற்றும் மத்திய துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் வருகையளித்தனர்.
தொடக்க நிகழ்ச்சியில் ஆளுநர் அஹ்மத் ஃபுஸி, முதலமைச்சர் கொன் இயோவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பிரதான மேசையில் ‘லார் சாங்’ நிகழ்ச்சியை நிறைவுச் செய்தனர்.
அதே நேரத்தில், சிங்க நடனம் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளுடன் விழாவும் அலங்கரிக்கப்பட்டது; பினாங்கின் ‘யுபோரியா’ நடனக் கலைஞர்கள் சங்கத்தின் நவீன நடனம்; பொம்மலாட்டம்; பாரம்பரிய டிராம் வாத்தியம் மற்றும் பாடல் இடம்பெற்றன.
மீ கோரேங், டால்சா ரைஸ், சாத, டிம்சம், பழங்கள், பானங்கள் மற்றும் பிற உணவுகளும் திறந்த இல்ல உபசரிப்பில் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், கொன் இயோவும் அவரது மனைவியும் வருகையளித்த குழந்தைகள் மற்றும் காப்பக இல்ல சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ‘அங்பாவ்’ வழங்கினர்.