பத்து காவான் – பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, இம்மாநிலத்தின் சமீபத்திய தொழில்துறை முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப், பத்து காவான் தொழில் பூங்காவில் (BKIP) உள்ள ViTrox கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவன அமைப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளைப் பற்றி நேரில் சென்றுப் பார்வையிட்டார்.
ViTrox நிறுவனமானது ஒரு கண்-பரிசோதனை உபகரண தயாரிப்பாளராகும். இந்நிறுவனம் தயாரிப்பு மேம்பாடு மற்றும் கார்ப்பரேட் செயல்திறன், அத்துடன் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் அதன் சிறந்த செயல்திறனுக்காக பல தேசிய மற்றும் அனைத்துலக அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளது.
தற்போது, ViTrox மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, பிரேசில், மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் விரிவான வாடிக்கையாளர்களுடன் உலகின் முன்னணி தானியங்கி இயந்திர கண் ஆய்வு தீர்வு வழங்குநர்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ViTrox தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவருமான சூ ஜென் வெங் ஜக்தீப்பை வரவேற்றார். மேலும், அவர் இந்நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் உபகரணங்கள், இயந்திரங்களைப் பார்ப்பதற்கும் ஜக்டிப் அந்நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார்.
பின்னர், ஜக்தீப் அதன் தொழிற்சாலை இருக்கும் அதே இடத்தில் அமைந்துள்ள ViTrox கல்லூரியையும்
சுற்றிப் பார்த்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களால் இக்கல்லூரி திறப்பு விழாக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொழில் சார்ந்த ஊக்கமளிக்கும் கல்வித் திட்டத்தை வழங்குகிறது. இம்மாநிலத்தில் திறன் மிக்க தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய இந்தக் கற்றல் சூழல் துணைபுரிகிறது.
ViTrox நிறுவனம் அதன் கல்வி மையமான ViTrox கல்லூரி மூலம் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் அதன் முயற்சியைப் பாராட்டினார்.
ViTrox நிறுவனம், பல்கலைக்கழகத்தை நிறுவ மாநில அரசின் உதவியை நாடியுள்ளது. இக்கோரிக்கை குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என ஜக்தீப் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பினாங்கு மாநிலத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ViTrox நிருவனத்தை முன்மாதிரியாக கொண்டு திறமையான தொழிலாளர்களை உருவாக்க இம்மாதிரியான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என ஜக்தீப் கேட்டுக் கொண்டார்.