தி ரைஸ்’ வீடமைப்புத் திட்டம் ஆடம்பர அடுக்குமாடிக்கு நிகராக நிர்மாணிக்கப்பட்டது- ஜெக்டிப் பெருமிதம்

Admin

ஜார்ச்டவுன் – “மாநில அரசாங்க வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஜாலான் எஸ்.பி செல்லையா அருகாமையில் இருக்கும் தி ரைஸ்அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் 2,093 உரிமைமையாளர்கள் கூடிய விரைவில் சாவியைப் பெற்றுக் கொள்வர்,” என உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் துவக்க விழா கண்ட இத்திட்டம் நிறைவடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு இந்த வீடமைப்புத் திட்டம் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பைப் போல் அனைத்து பொது வசதிகளும் கொண்டுள்ளதை கண்டு பெருமிதம் கொண்டார்.

இந்த மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் வீட்டு சாவி ஒப்படைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் மேம்பாட்டளரான சிபிகோன் சென்.பெர்ஹாட் துப்புரவுப்பணி மேற்கொள்வதாகவும், அதன் விற்பனை 2,093 வீடுகளில் 99 விழுக்காடு முடிந்துள்ளது என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் கூறினார்.

ஜார்ச்டவுன் மாநகரின் மையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கென பிரத்தியேகமாக நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், விளையாட்டுப் பூங்கா மற்றும் நூல் நிலையம் ஆகியவை கட்டப்பட்டது பெருமைக்குரியது.

இந்த பொது வசதிகள் அனைத்தும் மாநில அரசின் பரிந்துரைக்கப்பட்ட வழிக்காட்டலில் இடம்பெறவில்லை மாறாக மேம்பாட்டாளரிடம் இருந்து பெறப்பட்ட பரிசு எனவும்; நாட்டிலே மேற்குறிப்பிட்ட அனைத்து பொது வசதிகளைக் கொண்ட முதல் திட்டமாக இது இருக்கலாம் என கூறினார்.

மேலும் கருத்துரைத்த ஜெக்டிப், மலிவு விலை மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட இந்த இரண்டு வீடமைப்புத் திட்டங்களுக்கும் பசுமை கட்டிடம் குறியீடு (ஜி.பி.) பெற முயன்ற ஜூபிகானின் முயற்சிகளைப் பாராட்டினார். கூடிய விரைவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் தங்கம் மதிப்பீடும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்திற்கு சான்றிதழும் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு மாநகர் கழகச் செயலாளர் அட்னான் மொஹட் மற்றும் ஜூபிகான் இயக்குநர்களான லிம் பெங் கியோங் மற்றும் டிக்சன் லிம் கலந்து கொண்டனர்.

பெங் கியோங் சந்தித்தபோது, இந்த மாத இறுதிக்குள் சி.சி.சி (நிறைவு மற்றும் இணக்க சான்றிதழ்) பெறுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்று கூறினார்.