புக்கிட் தம்புன்- கூடிய விரைவில் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர்,கோ சூன் ஐக் தனது தொகுதியில் வசிப்பவர்களுக்கு 333 உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகையின் கொண்டாட்டத்தின் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே விருந்தோம்பல் மற்றும் பரிசுக்கூடைகள் வழங்கப்படும்.
நாளை (நவம்பர், 9)முதல் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (சி.எம்.சி.ஓ) அமலாக்கம் காணவிருப்பதால் இன்று தான் சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இறுதி நாள் என்பதால் இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு வருகையளித்த பொது மக்களின் பாதுகாப்புக் கருதி உணவுகள் பரிமாறாமல் பொட்டலமாக வழங்கப்பட்டன.
“இந்த சி.எம்.சி.ஓ அமலாக்கத்தால் உணவுகளைப் பொட்டலமாக கொடுத்தல்; வாகனங்களில் எடுத்துச் செல்லுதல்; வீடு வீடாகச் சென்று வழங்குதல் என மூன்று வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
” மேலும், வல்டோர் தோட்ட வசதிக் குறைந்த பி40 குழுவைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன,” என கோ சூன் ஐக் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கம்போங் சமூக நிர்வாக கழகம் (எம்.பி.கே.கே) தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டார்.
வருகின்ற மூன்று நாட்களுக்குள்,வல்டோர் தேட்டம், சிம்பாங் அம்பாட், தாமான் மெராக் மற்றும் பண்டார் காசியா, பத்து காவான் ஆகிய நான்கு பகுதிகளில் தேர்தெடுக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொட்டலம் வழங்கப்படும், என சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
மேலும், புக்கிட் தம்புன் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) இந்து ஊழியர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொட்டலம் விநியோகிக்கப்படும், என்றார்.