தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க கோரிக்கை -குமரன்

cm

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை  வழங்குவதன் அவசியத்தை பினாங்கு மாநில அரசாங்கம் ஆய்வு செய்யவிருக்கிறது.

இன்று மாநில சட்டமன்றத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனின் துணைக் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அதிகாரப்பூர்வ மாநில சுற்றறிக்கை அரசிதழ் பதிவின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தற்போது ஒரு நாள் மட்டுமே பொது விடுமுறை ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.

kumaran
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்

நம் நாட்டில் பிற கொண்டாட்டங்களுக்கு குறிப்பாக நோன்புப் பெருநாள், சீனப் பெருநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. அதே போன்று, இந்தியர்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிக் கொண்டாட்டத்திற்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அவசியம் என்பதை கருத்தில் கொண்டு குமரன் கிருஷ்ணன் இக்கேள்வியை முன்வைத்தார்.

“இது பொது விடுமுறை நாட்களை அமல்படுத்தும் மலேசிய விடுமுறை சட்டம் 1951 (சட்டம் 369) கீழ் அமலாக்கம் காண்கிறது.

“இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுக்கு இச்சட்டம் வழங்குகிறது.

“தற்போதைக்கு, தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறையை அரசிதழில் வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை. ஆயினும், மாநில அரசு இந்த விவகாரத்தை மேலும் ஆய்வு செய்ய தயாராக உள்ளது.

“அதே நேரத்தில், பொதுச் சேவைத் துறையில் (JPA) கூறப்பட்டுள்ளபடி, இந்திய அரசு ஊழியர்கள் இக்கொண்டாட்டத்தின் போது கூடுதல் ஒரு நாள் பதிவு செய்யப்படாத விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்,” என்று சாவ் கூறினார்.