தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் – சாவ்

Admin

 

 

புக்கிட் தம்புன் – கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநில அரசு ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரமாண்டமாக நடைபெற்றது.

பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார், தோ புவான் டத்தோஸ்ரீ உத்தாமா கத்திஜா முகமது ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் பினாங்கு வாழ் மக்களிடையே மரியாதை மற்றும் புரிந்துணர்வு மேலோங்கியுள்ளது என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த திறந்த இல்ல உபசரிப்பை அனைவரும் குறிப்பாக இந்துக்கள் மற்றும் சீக்கியர்களான நமது நண்பர்கள் எதிர்ப்பார்த்த தருணமாகும்.

“இந்த மகிழ்ச்சியை இனம் மற்றும் மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில், இன்று அனுபவிக்கும் ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கும் இது பெரிதும் பங்களிக்கிறது.

“சமூகத்தில் பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையை வலுப்படுத்துவதற்கும்  இம்மாதிரியான கொண்டாட்டங்கள் வழிவகுக்கிறது.

“இந்தக் கொண்டாட்டத்தில், மாநில ஆளுநரின் வருகை, இம்மாநில மக்களிடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாக திகழ்கிறது,” என்று நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ், ஆஸ்பென் விஷன் சிட்டியில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் இவ்வாறு பேசினார்.

மேலும் பேசுகையில் சாவ், பினாங்கு மாநில அரசாங்கத்துடன் இணைந்து சிறப்பாக இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த இரண்டாம் துணை முதல்வர் மற்றும் மாநில செயலாளர் அலுவலகம் ஆகிய முதன்மைக் குழுவிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், P047 பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளரும் கொன் இயோவ், இம்மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தை மேலும் வலுவூட்டுவதற்காக பல்வேறு முயற்சிகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை உருவாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது, என்றார்.

இது தொடர்பான வளர்ச்சியில், பினாங்கில் உள்ள தனது நிர்வாகமும் இந்திய சமூகம் உள்ளிட்ட மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டுவசதி திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் கொன் இயோவ் தெரிவித்தார்.

“அண்மையில், கலிடோனியா தோட்ட குடிமக்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வசதியான மற்றும் தரமான வாழ்க்கைக்காக குறிப்பாக அவர்களின் அன்பான குடும்பத்துடன் வாழ ஒரு வசதியான வீடமைப்புத் திட்டம் வழங்கி பினாங்கு மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்துடன் கலிடோனியா தோட்டக் குடிமக்களுக்கு இது மிகவும் அர்த்தமுள்ள ‘பரிசு’ என்று அவர் விளக்கினார்.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது.