ஜார்ச்டவுன் – அண்மையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் மற்றும் ஓம் சக்தி ஆன்மீகம் மற்றும் தொண்டு அறக்கட்டளை இணை ஏற்பாட்டில் சிறைக் கைதிகளுக்குத் தீபாவளி பலகாரங்கள் வழங்கப்பட்டன.
‘தீபம்‘ என்றால் ஒளி, இருள் நீக்கி ஒளித் தரும் பண்டிகையே தீபாவளி என அழைக்கப்படுகிறது. இப்பண்டிக்கையை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறை கைதிகளுக்கும் பலகாரங்கள் வழங்கப்படுகின்றன, என மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் தெரிவித்தார்.
பொதுவாகவே, அரசு சாரா இயக்கங்கள் வசதி குறைந்த பொது மக்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் சார்ந்த தரப்பினருக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் வேளையில் இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் சிறை கைதிகளும் இக்கொண்டாட்டத்திலிருந்து தனித்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 19 ஆண்டுகளாக இந்த பலகார அன்பளிப்பு வழங்கி வருவதாக தனபாலன் நந்தகுமார் மேலும் தெரிவித்தார்.
பொது மக்கள் அனைவரும் குறிப்பாக இந்துதர்ம மாமன்றம் மற்றும் ஓம் சக்தி ஆன்மீக மற்றும் தொண்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் தன்னார்வலராக வலம் வந்து கடந்த அக்டோபர் 12-ஆம் நாள் தீபாவளி பலகாரங்களைத் தயார் செய்தனர். அன்றைய தினம் இந்தியர்களின் பாரம்பரிய பலகார வகையான முறுக்கு, அதிரசம் மற்றும் பல இனிப்பு வகைகளும் சேர்க்கப்பட்டுப் பொட்டலமாகத் தயாரிக்கப்பட்டன. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் வருகையளித்தார். இத்திட்டம் வெற்றிக்கரமாக வழிநடத்த நிதியுதவியும் நல்கினார் என்பது பாராட்டக்குறியது.
கடந்த அக்டோபர் 16-ஆம் நாள், தயார் செய்யப்பட்ட 3,800 பலகாரப் பொட்டலங்களை பினாங்கு சிறைச்சாலைக்கு 1,800 பொட்டலமும் ஜாவி சிறைச்சாலைக்கு 2,000 பொட்டலமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பினாங்கு சிறைச்சாலை தலைமை இயக்குநர் தே ஹொக் சூன், பட்டர்வொர்த், ஓம் சக்தி ஆன்மீக மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைவர் நல்லதம்பி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாமன்றத்தின் ஏற்பாட்டில் சிறை கைதிகள் குற்றச்செயல்களிலிருந்து விடுப்பட்டு சிறந்த மனிதராக உருமாற்றம் காணும் பொருட்டு கடந்த 30 வருடங்களாக பினாங்கு சிறைச்சாலையில் சமயம் மற்றும் நன்னெறி வகுப்பு பிரத்தியேகமாக இந்தியர்களுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்பு ஜாவி சிறைச்சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகின்றது.