கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் திகதி தீபாவளி திருநாள் அனைத்து மலேசிய இந்தியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பினாங்கு வாழ் இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு தலைவர்கள் அவர் தம் தொகுதிகளில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடத்தி வருகின்றனர்.
பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ரெசிடென்சி வில்லாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், சட்டமன்ற சபாநாயகர் லாவ் சூ கியாங, ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ மொக்தார் ஒத்மான், நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒத்மான் , பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாநில முதல்வர் அவர் தம் துணைவியாருடன் இந்திய பாரம்பரிய உடையில் வருகையளித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
2011-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க மேற்கொண்ட திட்டத்திற்கு இன்று வரை கூட்டரசு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் பேராசிரியர். மாநில அரசாங்கம் நிலம் வழங்க தயார் நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கூட்டரசு அரசாங்கம் அறிவித்த பட்ஜெட் 2017 ‘அரசியல் ஒப்பனை’ எனவும் இந்தியர்களுக்கு நன்மை அளிப்பதாகக் கூறி 14வது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு பெற செய்யும் முயற்சி எனத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் கொன் யாவ் மற்றும் லெபோ பசார் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழகம் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இனிதே நடைபெற்றது. ஜோர்ச்டவுன் பாரம்பரிய தளத்தில் அமைந்துள்ள லெபோ பசாரில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்புக்கு 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகையளித்தனர். தீபாவளி திறந்த இல்லத்தில் இடம்பெற்ற இந்திய உணவுவகைகளை அனைவரும் உண்டு சுவைத்தனர். பொது மக்கள் ஒரு குடையின் கீழ் தோசை, வடை, வாழை இலை உணவு, ‘நாசி கண்டார்’ மற்றும் இனிப்பு வகைகள் சாப்பிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மலேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சேம்பர் தலைவர் டத்தோ வசந்தராஜன் மற்றும் மாநகர் கழக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.