துரு லைட் சீனப்பள்ளிக்கான நிதியுதவி பரிசீலிக்கப்படும் – சாவ்

Admin

 

புக்கிட் தெங்கா – ஜுரு, துரு லைட் சீனப்பள்ளியின் புதிய கட்டிட சிறப்பு அறைகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக விண்ணப்பித்துள்ள ரிம144,400 நிதி ஒதுக்கீடு பரிசீலிக்கப்படும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் நவம்பர்,1 அன்று அப்பள்ளி நிர்வாகம் எழுதிய எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைக் குறிப்பிட்டார்.

“இந்த ஆரம்பப் பள்ளி நிர்வாகத்தினர், மேம்பாட்டு நோக்கங்களுக்காக பினாங்கு மாநிலத்திடம் இருந்து நிதியுதவி கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

“இந்த மேம்பாட்டுத் திட்டத்தில், அறிவியல் ஆய்வகம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் ஆடியோ விஷுவல் ஆய்வகம் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களும் இதில் அடங்கும், இதற்கு ரிம144,400 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியின் வெளியே தனது பத்து காவான் நாடாளுமன்ற ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்யும் போது, சாவ் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

மாநில அரசு ஆரம்பப் பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து தொடக்கத்தில் இருந்தே கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

2013-2022 வரை துரு லைட் சீனப்பள்ளிக்கு மாநில அரசு மொத்தம் ரிம461,000 நிதியுதவி வழங்கியுள்ளது என்று சாவ் கொன் இயோவுடன் வருகையளித்த புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியோங் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, பள்ளியின் தலைமையாசிரியர் லீ தியாம் ஃபேட், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிம் ஷியாவ் ஜுவாங் மற்றும் பள்ளி வாரியப் பிரதிநிதி சோங் எங் சியோங் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, 15வது தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு சாவுடன் ஆதரவாளர்களும் இணைந்து புக்கிட் தெங்கா மாநிலத் தொகுதியின் கீழ் உள்ள பெர்காம்புங்கான் ஜூருவுக்குச் சென்று பொது மக்களைச் சந்தித்தனர்.

அங்கு, குடியிருப்பாளர்கள், அங்காடி வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் பகுதிகளில் அவரவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக நேரடியாகச் சென்று சந்தித்தார்.