ஆயிர் ஈத்தாம் – பினாங்கு மாநிலத்தின் இரு உள்ளூராட்சி மன்றங்களின் (பி.பி.தி) 464 அமலாக்கப் பணியாளர்கள் கோவிட் -19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் முதல் பிரிவில் தடுப்பூசியைப் பெறுவார்கள்.
மார்ச்,2 ஆம் தேதி நடைபெற்ற உள்ளூராட்சி தேசிய கவுன்சில் கூட்டத்தின் (எம்.என்.கே.டி)
போது தனது தரப்பில் இந்த பிரச்சனையை எழுப்பியதாக வீடமைப்பு, உள்ளூராட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“பினாங்கு மாநகர் கழகத்தின் (எம்.பி.பி.பி) 215 உறுப்பினர்களும்; செபராங் பிறை மாநகர் கழகத்தின் (எம்.பி.எஸ்.பி) 249 அமலாக்க பணியாளர்கள் என 464 பேர்கள் முதல் கட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர்.
“இதுதொடர்பாக, கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற பினாங்கு மக்களும் கூடிய விரைவில் கோவிட்-19 தடுப்பூசி பெற பதிவு செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வதாக,” இன்று காலை ஜாலான் அங்சானா, சுகாதார கிளினிக்கில் கோவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோவிற்கு அடுத்த நிலையில், மாநில சபாநயகர் டத்தோ லாவ் சூ கியாங் மற்றும் 17 மாநில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல் கட்ட தடுப்பூசியை இன்று பெற்றுக்கொண்டனர்.
முதல் கட்ட தடுப்பூசி பெறும் திட்டத்தில் தெ லாய் ஹெங் (கொம்தார் சட்டமன்ற உறுப்பினர்); ஜோசப் எங் சூன் சியாங் (ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர்); கிறிஸ் லீ சுன் கிட் (புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர்);ஆ. குமரேசன் (பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர்); ஆர்.எஸ்.என். ரேயர் (ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்); முஹம்மது பக்தியார் வான் சிக் (பாலிக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர்); மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர், செனட்டர் லிம் ஹுய் யிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் நேற்று கோவிட்-19 தினசரி வழக்குகள் குறித்து கருத்து கூறுகையில், பினாங்கில் நேற்று புதிதாக பதிவாகிய 337 வழக்குகளில் 72 உள்ளூர் குடிமக்கள் மற்றும் எஞ்சிய 265 வழக்குகள் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர். மேலும், ‘குயின்ஸ் வாடர்பிராண்ட் கட்டுமான தளம் மற்றும் ஜாலான் கெபுன் நானாஸ் கட்டுமான தளம் என இரண்டு கிளாஸ்தர்கள் பினாங்கில் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து, ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் ‘மைசெஜாத்தெரா’ செயலியின் வாயிலாக கோவிட்-19 தடுப்பூசிக்கு பதிவு செய்யுமாறு பினாங்கு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கோவிட்-19 சங்கிலியை உடைக்க அனைத்து தரப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) பின்பற்றி தடுப்பூசியை பெற ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன்வழி, இப்போராட்டத்தில் வெற்றிப்பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.