கெபாலா பத்தாஸ் – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.00 மணியளவில் ஏற்பட்ட லஹார் தியாங் ‘Intake inlet’ பிரச்சனையால் சுங்கை மூடா நீர் நெருக்கடி சம்பவத்தைத் தொடர்ந்து முழு விசாரணை நடத்துமாறு தேசிய நீர் சேவை ஆணையத்திடம் (SPAN)
இன்று வலியுறுத்தினார்.
எதிர்பாராத நீர் நெருக்கடியினால் தீவு மற்றும் பெருநிலத்தில் உள்ள 400,000-க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் நீர் தடையை அனுபவித்ததாக நம்பப்படுகிறது.
பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) இன்றைய ஊடக வெளியீட்டில், சுங்கை மூடா தடுப்பணை ஒன்றில் தானியங்கி சென்சார் செயலிழந்ததால், திடீரென வெள்ளக் கதவு திறக்கப்பட்டு, அதிக அளவு ஆற்று நீர் கடல் நீரில் கலக்கப்பட்டதாக அறிவித்தது.
“இந்தச் சம்பவம் கெடாவில் நடந்திருந்தாலும், இதனால் பல பினாங்கு வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில், இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்துமாறு SPAN-ஐ வலியுறுத்த விரும்புகிறேன்.
பினாங்கில் சுமார் 400,000 பயனீட்டாளர்கள் இந்தச் சம்பவத்தின் விளைவாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உறுதியாக நம்புகிறோம்.
“மேலும், கெடா மாநில தடுப்பணையில் உள்ள தானியங்கி சென்சார் பிரச்சனையால் பினாங்கில் இவ்வளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், SPAN கெடா மாநில அதிகாரிகளை அங்குள்ள அனைத்து தடுப்பணைகளையும் அமைப்புகளையும் சரிபார்த்து, மேம்படுத்தப்பட வேண்டிய அல்லது பழுதுபார்க்க வேண்டிய வேறு ஏதாவது இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
“இதனைத் தடுப்பு பராமரிப்புப் பணிகள் என்று கூறலாம். இது போன்ற நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கையாகும்,” என்று சாவ் கூறினார்.
இதற்கிடையில், PBAPP தலைமை செயல் அதிகாரி கே.பத்மநாதன் கூறுகையில், சுங்கை மூடா ஆற்றின் நீர்மட்டம், இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, 1.66 மீட்டராக உயர்ந்துள்ளது.
நேற்று காலை நடந்த சம்பவத்தின் போது, நீர்மட்டம் 0.4 மீட்டர் வரை குறைந்தது.
விரிவாக்கப்பட்ட மெங்குவாங் அணையில் இருந்து நீரை எடுத்து விநியோகம் செய்தது, இந்த சிக்கலை தீர்ப்பதற்கான PBAPP இன் குறுகிய கால அவசர நடவடிக்கை ஆகும்.
“லஹார் தியாங் மூல நீர் விநியோக செயல்பாடுகள் 83 சதவீதத்தை எட்டியுள்ளன. சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு ஆலையில் (WTP) நீர் உற்பத்தி 100 சதவீதத்தை எட்டியுள்ளது அதாவது ஒரு நாளைக்கு சுமார் 1,000 மில்லியன் லிட்டர்கள் (MLD) அடையும்.
“தீவு மற்றும் பெருநிலத்தில் உள்ள சுமார் 400,000 பயனீட்டாளருக்கு நீர் விநியோகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
“நேற்றைய சம்பவத்தால் இன்னும் 40,000 பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று பத்மநாதன் கூறினார்.
இது தொடர்பாக, PBAPP
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மே 14 முதல் 17 வரைக்குள் நீர் தடை நீடிக்கும் என்று அனுமானிக்கப்பட்டது. ஆனால், இந்த வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 90 சதவீத நீர் சுமார் 36 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.
“PBAPP வாரியத்தின் நற்செயலைப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, உளு மூடா வடிநிலம் திறம்பட மற்றும் தொழில் ரீதியாக நிர்வகிக்க முன்மொழியப்பட்ட ‘Ulu Muda Basin Authority’ (UMBA) அமைக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“பினாங்கு மற்றும் கெடா ஆகிய இரண்டு மாநிலமும் உலு மூடா வடிநில நீரை அதிகம் நம்பியுள்ளன. இதில் சுங்கை மூடா நீர் விநியோகம்
மற்றும் நீர்ப் பாசனம் அடங்கும்.
“நமது மக்கள், நமது பொருளாதாரம் மற்றும் வடக்கு கோரிடார் பொருளாதாரப் பிராந்தியத்தின் (NCER) எதிர்கால நலனுக்காக இந்த நதி வடிநிலத்தை முறையாகப் பாதுகாப்பது அவசியம், அதோடு புறக்கணிக்கக்கூடாது,” என்று சாவ் மேலும் கூறினார்.
இதைத் தவிர்த்து, சுங்கை பேராக் மூல நீர் பரிமாற்றத் திட்டத்தை (SPRWTS) செயல்படுத்துவது குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜொஹாரி, வருகின்ற ஜூன் மாதத்தில் பினாங்கு மற்றும் பேராக் அரசாங்கங்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது, என்றார்.