தேர்தல் பிரச்சாரம் சமூக ஊடக மட்டுமின்றி நேரடியாக நடத்தப்படுவதும் அவசியம் – சாவ்

Admin

புக்கிட் தம்புன் – “வருகின்ற ஆகஸ்ட்,12 நாள் அன்று பினாங்கு மாநில தேர்தலில்(PRN) வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் பக்காத்தான் ஹராப்பான் (PH) தனிநபர் மற்றும் குழு முறையிலான பேரூரை நிகழ்த்துவது அவசியம்.

“இருப்பினும், வாக்காளர்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்கள் வாயிலான பிரச்சாரத்தில் அதிகம் நாட்டம் கொள்கின்றனர். எனவே, பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் இம்முறை ஊடக வாயிலான பிரச்சாரத்திற்கும் கூடுதல் கவனம் செலுத்துவதாக,” பெர்கம்போஙான் ஜூரு பொதுச் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களைச் சந்தித்தப் பின்பு பராமரிப்பு அரசாங்க முதலைமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.

“வாக்காளர்களுடனான நேரடிச் சந்திப்பு மற்றும் பிரச்சாரம் மேற்கொள்வது மிக அவசியமாகும். அவர்கள் எதிர்நோக்கும் உள்ளூர் பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த தலமாக அமையக்கூடும்.

“நமது அன்றாட வாழ்க்கையில் மெய்நிகர் அமர்வு அல்லது சமூக ஊடக பயன்பாடு புதிய இயல்பாக மாறி வந்தாலும், மக்களுடனான நேரடிச் சந்திப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும், என சாவ் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

ஒற்றுமை வேட்பாளர்களின் பேரூரை நிகழ்ச்சியின் போது சிறிய அளவிலான கூட்டம் காணப்பட்டது என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, பெரும்பாலானோர் சமூக ஊடக வாயிலான நேரடி ஒளிப்பரப்பைப் பின்பற்றுகிறார்கள் என்று சாவ் பதிலளித்தார்.

“தற்போது, மாநில தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளன. மேலும், ஒற்றுமை அரசாங்கத்தின் பரப்புரைகள் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். மாநில மேம்பாட்டுக்குத் தொடர்ந்து பாடுபடுவோம்.

“ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்கள் பொது மக்களிடம் ஒற்றுமையின் நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலம், பொது மக்கள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து மீண்டும் பினாங்கில் ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்கக்கூடும்,” என்றார்.
“தேர்தல் பிரசாரம் தொடங்கிய 4-வது நாளில் பொது மக்களிடைய மிகுந்த ஆதரவு பெறப்படுகிறது.

“ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அவசியம், என்று சாவ் கூறினார்.

புக்கிட் தெங்காவின் பி.கே.ஆர் வேட்பாளர் கூய் சியாவ் லியுங் அவர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில், பராமரிப்பு அரசாங்க முதலமைச்சரும் கலந்து கொண்டார்.

இளைஞர்களிடையே ஒற்றுமை வேட்பாளர்களுக்கு அதிக ஆதரவு கிடைப்பதாக கூய் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பினாங்கில், 25% வாக்காளர்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பரப்புரைகள் அவர்களைச் சென்றடையும் வகையில் எங்கள் சமூக ஊடக தலங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.