ஜார்ச்டவுன் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமலாக்கத்தின் காரணமாக இவ்வாண்டு தைப்பூசம் கொண்டாட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, தண்ணீர்மலை, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபணி ஆலயத்தில் அத்தினத்தன்று செய்யப்பட்ட பூஜைகள் அனைத்தும் முகநூல், யூடியூப் மற்றும் வலைத்தளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலயத்தில் ஜனவரி, 27 முதல் 29 வரை பூஜைகள் மற்றும் உபயங்கள் நடைபெற்றது.
தண்ணீர்மலை, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம், ஆலயத்தில் நடைபெற்ற வழிப்பாட்டு நேரடி ஒளிபரப்பு உள்நாட்டிலும் உலக அளவிலும் இந்து பக்தர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது, என்றார்.
“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு, தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலயத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகள் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தோம்,’’ என்று கொம்தாரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுப்பிரமணியம் கூறினார்.
“நேரலை ஒளிபரப்புக்கு சிறந்த இணைப்புச் சேவையை வழங்க, வழங்கிய ‘டிஜி’ தொலைத்தொடர்பு நிறுவனம் எங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சியடைகிறோம்.
“மேலும், 36 மணிநேர பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு ஒரு தடையில்லா நேரலை சேவையை வெற்றிகரமாக வழங்கியது, ’’ என்று கூறினார். அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோவிலும் இந்த பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
நேரலை அறிக்கையின் அடிப்படையில், மொத்தம் 34 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஜனவரி 27 முதல் 28 வரை நேரடி ஒளிப்பரப்பைப் பார்த்ததாக, சுப்பிரமணியம் தெரிவித்தார்.
” இந்த நேரலை முகநூல், யூடியூப், மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் என தத்தம் 1.6 இலட்சம், 24,000 மற்றும் 42,000 பார்வையாளர்கள் கண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றுள்ளனர்.
“இந்த வருட தைப்பூசக் கொண்டாட்டத்தை பக்தர்கள் சமூக ஊடக தளத்தின் மூலம் கண்டு களித்தனர். மேலும், உடல் நிலை காரணமாக இதுவரை தண்ணீர்மலை ஆலயத்திற்குச் செல்லாதவர்கள் கூட இவ்வாண்டு தைப்பூசம் வழிப்பாட்டின் அனைத்து காட்சிகளையும் காண முடிந்தது.
“அதோடு, பக்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இ-அர்ச்சனை சேவைகளையும் வழங்கினோம்.
“எதிர்காலத்தில் ஆலயத்தில் நடத்தப்படும் அனைத்து பூஜைகளுக்கும் ‘அர்ச்சனைக்கான’ இணையத்தள சேவைகளைத் தொடர்வது மற்றும் மேம்படுத்துவது குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் முன்மொழிகிறோம்.
“இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும், ”என்றார்.
இதற்கிடையில், தொழில்நுட்ப முதலீட்டைப் பயன்படுத்தி, தைப்பூசம் புதிய இயல்பில் கொண்டாடப்பட்டதாக இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.
“கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து எதிர்காலத்தில் விடுப்பட்ட பின்னரும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட டிஜிட்டல் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். க்
“எதிர்காலத்தில் ஒரு அமைப்பு முறையை நிறுவ விரும்புகிறோம், இது தைப்பூசத்தை மட்டுமல்ல, ஆலயத்தில் நடத்தப்படும் தினசரி பூஜைகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்ப திட்டமிடுவதாகக் கூறினார்.
“மறைமுகமாக, இம்முயற்சி உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் மத விழாக்களில் பங்கேற்க வழிவகுக்கும்,” என்றார்.
இது தவிர, இந்த ஆண்டு தைப்பூசத்தின் போது மொத்தம் ரிம55,500 நிதி வசூல் செய்யப்பட்டதாக இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.
“இந்த தொகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ‘இ-அர்ச்சனை’ மூலம் ரிம15,300 மற்றும் நன்கொடை மற்றும் உபயம் சேகரிப்பில் இருந்து ரிம40,200 நிதி சேகரித்துள்ளது,” பேராசிரியர் மேலும் செய்தியாளர்களிடம் விவரித்தார்.