தொழிற்புரட்சி 4.0 எதிர்கொள்ள திறன் மிக்க மனித வளத்தை உருவாக்க வேண்டும் – பேராசிரியர்

Admin

புக்கிட் மெர்தாஜாம் – பினாங்கு மாநில அரசு மற்றும் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற 2022 கல்வி மற்றும் தொழில் திறன் கல்வி பயிற்சி கண்காட்சி கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஆண்டு மே, 28 முதல் 29 வரை காலை மணி 11.00 முதல் மாலை மணி 6.00 வரை மைடின், புக்கிட் மெர்தாஜாம் பேரங்காடி தலத்தில் நடைபெற்றது.

“இக்கல்வி மற்றும் தொழில் திறன் கல்வி பயிற்சி கண்காட்சி பிரத்தியேகமாக மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) முடிவுகளைப் பெற்றிருந்த மாணவர்கள் தங்களின் மேற்கல்வியைத் தொடர சிறந்த வழிகாட்டியாகத் திகழும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது,” என பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வரவேற்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
இக்கல்வி மற்றும் தொழில் திறன் கல்வி பயிற்சி கண்காட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்குச் சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் நான்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்கள் (TVET), 30 அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி என சுமார் 34 உயர்க்கல்விக் கூடங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தொழிற்புரட்சி 4.0 எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்களை தங்கள் தேர்வாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டில் தொழிற்சாலை நிறுவும் போது குறிப்பாக பொறியியல் துறையில் நிபுணத்துவம் மிக்க தொழிலாளர்களுக்கே கூடுதல் முன்னுரிமை வழங்குகின்றனர்.

எனவே, மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்களில் கல்வி கற்கும் போது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று வேலை வாய்ப்புப் பெறுவதற்கும் பிரகாசமாக இருக்கிறது.

தற்போது, அறிவியல் துறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. மாநில கல்வி, மனித மூலதன மேம்பாடு, தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான இராமசாமி ‘STEM’ எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறையில் மாநில அரசு தனியார் துறையுடன் இணைந்து பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு STEM கல்வியில் அதிக நாட்டம் கொள்வதோடு நிபுணத்துவம் மிக்க மனித மூலதனத்தை உருவாக்க இயலும்.

“சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். எனினும், சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் தொழிற்சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்து மேற்கல்வியை தொடருமாறுக் கேட்டுக் கொண்டார். மாநில அரசு தொழில் திறன் கல்வி பயிற்சி சார்ந்த மையத்தில் கல்வி பயில்வதையும் ஊக்குவிக்கிறது.

“மேலும், மனித வளத் திறமைகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அண்டை நாடுகளை விட பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இங்கு அதிக தொழில்நுட்ப முதலீட்டை ஊக்குவிப்பதும் அவசியமாகும். நிலையான வெளிநாட்டு முதலீடுகள் உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் புத்தாக்கத்துக்கும் உதவும்”, என பேராசிரியர் தமதுரையில் வலியுறுத்தினார்.