பாகான் டாலாம் – பினாங்கு மாநில அரசாங்கம் திறன்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு தரமான பயிற்சி வகுப்புகளை வழங்க கூடுதலான மானியங்களை வழங்கி வருகிறது. எனினும், இந்தக் கல்வியைப் பற்றிய வெளிப்பாடு மற்றும் புரிந்துணர்வு மாணவர்களிடையே குறைவாக இருப்பதால் மாணவர்களின் பங்களிப்பும் குறைவாகவே காணப்படுகிறது,” என்று பட்டர்வொர்த் டிஜித்தல் நூல்நிலையத்தில் ‘ILP Program Pilihan Bijak’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்து தமதுரையில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இவ்வாறு கூறினார்.
மேலும் பேசுகையில், தொழிற்புரட்சி 4.0 எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழில்கல்வி பயிற்சி மையங்களை தங்கள் முதன்மை தேர்வாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டில் தொழிற்சாலை நிறுவும் போது குறிப்பாக பொறியியல் துறையில் நிபுணத்துவம் மிக்க தொழிலாளர்களுக்கே கூடுதல் முன்னுரிமை வழங்குகின்றனர்.
“எனவே, மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழில்கல்வி பயிற்சி மையங்களில் கல்வி கற்கும் போது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று வேலை வாய்ப்புப் பெறுவதற்கும் பிரகாசமாக அமைகிறது,” என சத்தீஸ் குறிப்பிட்டார்.
ILP தொழில்கல்வி நிறுவனங்கள் மூலம் குறைந்த தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு கல்வியில் அதிக நாட்டம் கொள்ள ஊக்குவிப்பதோடு நிபுணத்துவம் மிக்க மனித வளத்தை உருவாக்க இயலும்.
தொடர்ந்து, மாணவர்களில் பெருபான்மையினர் தனியார் கல்லூரிகளில் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்பைப் படிக்கின்றனர். இதனால், மாணவர்கள் பட்டப்படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ரிங்கிட் கடனைச் சுமக்க வேண்டியிருக்கிறது. எனவே, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தங்கள் உயர்கல்வியைத் தொடருமாறு சத்தீஸ் அத்தினத்தன்று வருகையளித்த மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
ILP Program Pilihan Bijak எனும் நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநிலம் மட்டுமின்றி பேராக், கெடா மற்றும் கங்காரில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அண்டை நாடுகளை விட பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இங்கு அதிக தொழில்நுட்ப முதலீட்டை ஊக்குவிக்கிறது. நிலையான வெளிநாட்டு முதலீடுகள், உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் புத்தாக்கத் திறனை மேம்படுத்துவதோடு மனித வளத் திறமைகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவது அவசியம் என சத்தீஸ் மேலும் சூளுரைத்தார்.