தொழிலாளர் பிரச்சனைகளை கையாள்வதில் மாநில அரசு, தொழில்துறை இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்

Admin

 

புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில அரசு தொழில்துறையினருடன், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் (SMEs) நெருக்கமாக பணியாற்றி மாநிலத்தில் மனிதவள பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காணும்.

பினாங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. இருப்பினும், தொழில்துறைக்குத் தேவையான மனித வளம் மற்றும் நிபுணத்துவப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்கிறது என்று இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.

“எனவே, SME தொழில்துறைக்கு தேவைப்படும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற ஒரு கலந்துரையாடல் அமர்வை நடத்துவோம்.

“இதன்வழி, இந்த மாநிலத்தில் திறன் பற்றாக்குறை மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றின் பிரச்சனையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பங்குதாரர்கள் எங்களுக்கு கருத்துகளைப் பரிமாறி கொள்வர்கள்,” என்று ஜக்தீப் தி ஷிப் கல்லூரியில் நடைபெற்ற தொழில்-அகாடமி ஒத்துழைப்பு பட்டறையைத் துவங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், TalentCorp Malaysia Berhad குழும தலைமை நிர்வாக அதிகாரி தோமஸ் மேத்யூ மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

எனவே, மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப், வடக்கு பிராந்தியத்தில் SME துறையில் திறன் மிக்க பணியாளர்களை மேம்படுத்துவதிலும் TalentCorp மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டினார்.

“பினாங்கு ‘கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்ற அங்கீகாரத்தை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சியாக இது அமைகிறது.

“TalentCorp இன் ஆதரவுடன் பினாங்கு SME துறையை மேம்படுத்தவும், மேலும் பினாங்கு2030 இலக்கை அடைவதற்கானப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் முடியும்,” என்று ஜக்தீப் சூளுரைத்தார்.

இதற்கிடையில், IAC பட்டறையின் வாயிலாக பினாங்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத் தேவைகளின் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதாகவும் தோமஸ் கூறினார்.

“புதிய யுகத்தின் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் மாற்றமான தொழில்துறை புரட்சி 4.0 (IR4.0) மூலம் அமலாக்கம் காணும் “எதிர்கால பணி” என அமைக்கப்பட்டுள்ள வேலை முறையின் அம்சங்களில் உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

“எனவே, இந்த நாட்டில் SME தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வியூக முயற்சிகள் மற்றும் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்தப் பட்டறையின் முடிவுகள் சேகரிக்கப்பட்டு அனைத்து பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

“SME துறையில் நிலையான திறன் குழு (புதிய தொழில்நுட்பங்களின் எழுச்சி)” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த பட்டறையானது பல்கலைக்கழகங்களின் நிபுணத்துவமிக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் SME பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் என நம்பப்படுகிறது.