பாகான் – ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப மோட்டார் பழுதுப்பார்க்கும் துறையில் கி.இராமேந்தன்,41 பீடுநடைப் போட்டு வருகிறார்.
எஸ்.பி.எம் தேர்வுக்குப் பின்னர் குடும்ப சூழல் காரணமாக மேற்கல்வி தொடராமல் தொழில்கல்வி மூலம் சிறந்த எதிர்காலத்திற்கு வித்திட்டுள்ளார். ஜாலான் பாகான் ஆஜாமில் இரேமன் மோட்டார் பழுதுப்பார்க்கும் கடையை 15 வருடமாக வெற்றிகரமாக நடத்தி வருவதாகக் கூறினார்.
இடைநிலைப்பள்ளி பயின்று கொண்டிருக்கும்போதே வீட்டின் அருகில் இருக்கும் சீனர் ஒருவரிடம் இக்கைத்தொழிலை ஐந்தாண்டு காலம் கற்ற பின்னர் சொந்தமாக கடை ஒன்றை தொடங்கியதாக முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கோவிட்-19 பாதிப்பினால் இக்கடையின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பழுதுப்பார்க்கும் பொருட்களின் விலையும் அவ்வப்போது ஏற்றம் காண்கிறது. இதன் செலவை ஈடுக்கட்ட வாடிக்கையாளர்களிடம் அவர்களின் சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்கும் சூழல் நேரிடுகிறது. இதனால், வாடிக்கையாளர்களும் இன்னல்களை எதிர்கொள்வதோடு எங்களுக்கும் பாதிப்பாகிறது”, என்று இரேமன் கூறினார்.
இரேமன் மோட்டார் பழுதுப்பார்க்கும் கடை மத்திய அரசு அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது காலை 9 மணி தொடங்கி இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இங்கு மோட்டார் பழுதுப்பார்த்தல், மோட்டருக்கு சாயம் பூசுதல் மற்றும் பழைய மோட்டர்களை விற்றல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், தான் கற்றுக்கொண்ட இத்தொழிலை இத்துறையில் ஆர்வமுள்ள இரண்டு இளைஞர்களுக்கு கற்று கொடுத்து அவர்களை வாழ்க்கையில் முன்னெடுத்து செல்ல வழிகாட்டியாக இருப்பது பாராட்டக்குரியதாகும்.
அதே மோட்டார் கடையில் பணிப்புரியும் அருண்ராஜ் மற்றும் அர்வின் ராஜ் என்ற இரண்டு பதின்ம வயது இரட்டையர்கள் தங்களுக்கு மோட்டார் பழுதுப்பார்ப்பதில் அதிக ஆர்வம் என்று கூறுகிறார்கள். தங்களின் 12 வயதில் அவ்வப்போது இரேமனின் கடைக்கு உதவிக்கு சேர்ந்து பின்னர் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் முடித்த பின்னர் மேற்படிப்பு தொடர ஆர்வமில்லாத காரணத்தால் முழுநேரமாக இக்கடையில் பணியில் சேர்ந்தனர். இப்போது திறமையை வளர்த்துக்கொண்டு கைத்தொழில் ஒன்றே தங்களின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் என்ற போதனையில் இத்தொழிலை இரேமனிடம் திறன்பட கற்று வருவதாக முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் இந்த இரட்டையர்கள் குறிப்பிட்டனர்.
இக்கைத்தொழிலில் இன்னும் அதிகமான நுணுக்கங்களை அறிந்து எதிர்காலத்தில் சுயமாக மோட்டார் பழுதுப்பார்க்கும் கடையை திறக்க இலக்கு கொண்டுள்ளனர் இந்த துடிப்பான இருபத்து ஒன்று வயது இளைஞர்கள்.
வாழ்க்கையில் மேன்மையடைய கல்வி மட்டும் ஒரு சான்றில்லை. மாறாக கைத்தொழில், விடாமுயற்சி மற்றும் ஆர்வத்தின் வாயிலாகவும் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்று இரேமன் மோட்டார் பழுதுப்பார்க்கும் ஊழியர்கள் நிரூபித்துள்ளனர்.