பாகான் டாலாம்- “கோவிட்-19 தொற்று நோயின் பரவலை தடுக்க பாகான் டாலாம் வட்டாரத்தில் செபராங் பிறை மாநகர் கழகம், கம்போங் நிர்வாக செயல்முறை கழகம்(எம்.பி.கே.கே) மற்றும் உள்ளூர் அங்காடி சங்கத்தின் ஒத்துழைப்பில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, ஸ்ரீ பண்டார் பொதுச் சந்தையில் நடைபெற்ற முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபருடனான நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
பாகான் டாலாம் தொகுதியில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளிலும் சமூக இடைவெளி, உடல் சீதோஷ்ண நிலை பரிசோதனை மற்றும் முகக் கவசம் பயன்படுத்தல் என அடிப்படை பாதுகாப்பு கூறுகள் பின்பற்றப்படுகின்றன.
இவ்வட்டார பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க தொடக்கமாக 1,000 முகக் கவசங்கள் பாகான் டாலாம் நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டன. அண்மையில் மாநில அரசு வழங்கிய 1,000 முகக் கவசங்கள் ஸ்ரீ பண்டார் பொதுச் சந்தைக்கு வருகையளித்த பொது மக்கள் , வியாபாரிகள் மற்றும் அத்தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் வழங்கினார்.
“தற்போது இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பித்த நிலையில் பெரும்பான்மை பொது மக்கள் இதனைப் பின்பற்றுக்கின்றனர்; இருப்பினும் சிலர் இதன் முக்கியத்துவம் அறியாமல் வெளியில் காரணமின்றி நடமாடுகின்றனர். இப்பகுதியில் தகாத நடவடிக்கையில் ஈடுப்பட்டதால் சில இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டதாக காவல் துறையின் மூலம் தகவல் அறிவேன்.
பொது மக்கள் இந்த ஆணையைச் சாதாரணமாக எண்ணக் கூடாது, மாறாக இது வாழ்வு மற்றும் இறப்புக்கு நடுவில் ஏற்படும் போராட்டம் என்பதை உணர வேண்டும்,” என வலியுறுத்தினார்.
ஒருவர் காரணமின்றி வெளியில் நடமாடுவதால் அவர் மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களும் இக்கிருமி தொற்றுக்குப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வீட்டிலேயே இருங்கள், ஆணையைப் பின்பற்றுங்கள் என அறிவுறுத்தினார்.
இந்த கிருமி தொற்றை தடுப்பதற்கு
பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியில் முகக் கவசம் வழங்கப்படுகின்றன; மேலும் எம்.பி.கே.கே தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, ஏறக்குறைய 200 வசதிக் குறைந்த பொது மக்கள் மற்றும் தினசரி ஊதியத்தை நம்பிய குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன, என தெரிவித்தார்.
“மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் ஒவ்வொரு சட்டமன்றத்திற்கு ரிம30,000 உதவித் தொகையாக வழங்கியது வரவேற்கத்தக்கது. இந்த தொகையைப் பயன்படுத்தி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்திலும் அதன் பிறகும் பொருளாதார ரீதியில் எதிர்நோக்கும் மக்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும்,”என கூறினார்.