நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் முழுவதும் உதவி தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து உதவுவதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ மீண்டும் நிறைவேற்றியுள்ளார்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா ஆசிரம சிறுவர்களுக்கு இன்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ரேயர் உடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்து வழங்கினார்.
“பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், உதவி தேவைப்படுபவர்களின் நலனைக் கவனித்துக் கொள்வதையும் மாநில அரசு உறுதிச்செய்யும்.
இந்த நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாங்கள் (மாநில அரசு) தொடர்ந்து உதவிக்கரம் நீட்டுவோம்.
அதே வேளையில் அவர்களுக்கு உதவ விரும்பும் அனைத்து தரப்பினரையும் வரவேற்க விரும்புகிறேன், ’’ என்று உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் கிராமப்புற & நகர்ப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் விவரித்தார்.
மேலும் ஜெக்டிப் கூறுகையில், இராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு 50 பொட்டல மளிகை பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
10 ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு இவ்வுதவியை நல்கவுள்ளதையும் குறிப்பிட்டார். அத்தொகுதியில் உள்ள மற்ற இல்லங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.
பாதிக்கப்பட மற்றும் குறைந்த வருமானம் பெறும் குழுக்களின் சுமையை எளிதாக்க மாநில அரசு ஏற்கனவே ரிம 75 மில்லியன் கோவிட் -19 மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் அனைத்து மாநிலத் தொகுதிகளுக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.