ஜாலான் பினாங்கு, ஜாலான் பர்மா மற்றும் ஜாலான் டாக்டர் லிம் சியூ லியோங் சாலைகளை இணைக்கும் பிரதான நடைப்பாதை மேம்பாட்டுத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் திகதி பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக் கண்டது. இந்நடைபாதை கடந்த 1993-ஆம் ஆண்டு ரிம 1.25 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நடைப்பாதை பயன்படுத்தும் நடைப்பாதை பாதசாரிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதாவது வழிப்பறி கொள்ளை, திருட்டு சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்ட மாநில அரசு இந்நடைப்பாதை உடைத்து சமிஞ்சை விளக்குடன் கூடிய நடைப்பாதையை நிர்மாணிக்குமாறு கடந்தாண்டு மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பினாங்கு நகராண்மைக் கழகம் பொதுமக்களிடம் இந்நடைப்பாதை அவசியம் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட 138 நபர்களில் 96 பேர் இந்நடைப்பாதை அவசியம் எனப் பதிலளித்துள்ளனர். ஆகவே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநில அரசு இந்நடைபாதையை மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் கொண்ட நடைபாதையாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இதன்வழி, பொதுமக்கள் எதிர்நோக்கும் வழிப்பறி கொள்ளை மற்றும் இதர இன்னல்களை குறைப்பதற்கு ஏதுவாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மேலும் கூறினார்.
என்சய்க்னியா கொன்ஸ்ரக்ஷன் தனியார் நிறுவனம் (Syarikat Ensignia Construction Sdn Bhd) இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக திறந்த குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நடைப்பாதை ரிம6 மில்லியன் செலவில் பிப்ரவரி மாதம் தொடங்கி 9 மாதம் கால அவகாசத்தில் நிர்மாணிப்புப் பணி நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாநில அரசும் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் இம்முயற்சிகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவும் பெரிதும் துணைபுரியும் என அறிவித்தார் மாநில முதல்வர் அவர்கள்.