ஜாவி – மலேசிய இந்துதர்ம மாமன்ற, பினாங்கு கிளையின் ஏற்பாட்டில் அடிப்படை சமயப் பயிற்சி & இளைஞர் முகாம் 2019 ஆறாவது ஆண்டாக பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் இனிதே நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு (27- 28 ஏப்ரல் 2019) நடைபெற்ற இம்முகாமில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் 90 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
o
இந்நிகழ்வின் நிறைவு நாளில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரன் இந்துதர்ம மாமன்றத்தின் இம்முயற்சியினை பாராட்டினார். இந்திய சமுதாயம் குறிப்பாக நல்லொழுக்கம் கொண்ட மாணவர்களை உருவாக்க இம்மாதிரியான முகாம்கள் அவசியம் என எடுத்துரைத்தார். மேலும், பிற சங்கங்கள், கழகங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் இந்திய மாணவர்கள் பயன்பெறும் நிகழ்வுகளை அவ்வப்போது வழிநடத்த வேண்டும் எனவும் அவர்தம் உரையில் வலியுறுத்தினார்.
மலேசிய இந்துதர்ம மாமன்ற, பினாங்கு மாநிலத் தலைவர் நந்தகுமார் அவர்தம் உரையில் கூறுகையில் இம்மாதிரியான முகாமை தொடர்ந்து மற்ற தமிழ்ப்பள்ளிகளிலும் நடத்த இணக்கம் கொண்டுள்ளதை குறிப்பிட்டார். மேலும், தரமான தமிழ்ப்பள்ளி மாணவர்களை உருவாக்க சிறந்த வழிகாட்டலும் தலைமைத்துவம் கொண்டிருப்பதும் அவசியம். எனவே, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து அறிவார்ந்த மாணவர்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தீய வழிகளில் ஈடுப்படாமல் தடுக்கவும் அவர்களை அடுத்தாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு தயார் செய்யவும் இம்முகாம் உறுதுணையாக அமையும் என பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்செல்வி குறிப்பிட்டார். மேலும், இம்முகாமை வருங்காலங்களிலும் இப்பள்ளியில் நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.