பினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து பினாங்கு மாநில அரசு “நான் பினாங்கை நேசிக்கிறேன்” எனும் பிரச்சாரத்தை அண்மையில் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்றியமைப்பதில் இருந்து காப்பாற்ற இப்பிரச்சாரம் கையாளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதோடு, பினாங்கு வாழ் மக்கள் பினாங்கு மாநிலத்தின் மீது கொண்டுள்ள நேசத்தையும் இப்பிரச்சாரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூராட்சி, பொது போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தலைமையில் இப்பிரச்சாரம் தொடர்ந்து பினாங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என செய்தியாளர்களிடம் முதல்வர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்றினால் இம்மாநில மக்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநரை தேர்ந்தெடுக்க முடியாது. மாறாக மாநிலத்தை ஆட்சியமைக்கும் திட்டங்கள் அனைத்தும் கூட்டரசு பிரதேசம் மற்றும் லாபுவான் போல் அமைச்சரவையின் கீழ் செயல்படும் நிலை ஏற்படும். இந்நிலை பினாங்கு மாநிலத்தில் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பினரும் “நான் பினாங்கை நேசிக்கிறேன்” என்ற பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டும் என மாநில முதல்வர் கேட்டுக்கொண்டார்.