புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனநாயக செயற்கட்சியின் மூத்த தலைவருமான மதிப்பிற்குரிய திரு கர்பால் சிங் அவர்கள் கடந்த 17/4/2014-ஆம் நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமுற்றார். அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 3/4/2015 முதல் 5/4/2015-ஆம் நாள் வரை வாடா குருத்வாரா சாயிப் ஆலயத்தில் நடைபெற்றது. ஏறக்குறைய 40 ஆண்டுகாலமாக அரசியல் துறையில் ஈடுப்பட்ட மதிப்பிற்குரிய திரு கர்பால் சிங் அவர்களை நினைவுக்கூறும் வகையில் ஏப்ரல் மாதத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.. பினாங்கு ஈரோஆசியான் சங்க ஏற்பாட்டில் வருகின்ற 17/4/2015-ஆம் நாள் விருந்தோம்பல் நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
“கர்பால் சிங் சட்ட கருத்தரங்கு ” வருகின்ற 18/4/2015-ஆம் ஶ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறும். “கர்பால் சிங் பயணம்” என்ற பெயரில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு ஐனநாயக செயற்கட்சி ஆதரவில் “All Season Place (Farlim)”-எனும் இடத்தில் துவங்கி “Karpal Sigh Drive” வரை இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது . 25/4/2015-ஆம் நாள் “Karpal Sigh Drive” இடத்தில் அன்னாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படும். அன்று இரவு “கர்பால் சிங் நினைவலைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். மேலும் பினாங்கு சீக்கியர் சங்க ஏற்பாட்டில் வருகின்ற 26/4/2015-ஆம் நாள் நினைவஞ்சலி பிரார்த்தனை மற்றும் நிகழ்வுகள் வாடா குருத்வாரா சாயிப் ஆலயத்தில் நடைபெறும்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் திரு கர்பால் சிங் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். “கன் பாத்” என்ற முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் இறுதி நாளில் பொது மக்களைக் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைத்தார் பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் கர்பால் சிங் அவர்களின் புதல்வருமான திரு கோபிந் சிங். அமரர் கர்பால் சிங் அவர்களின் மறைவு குடும்பத்தாரை மட்டுமின்றி மலேசிய வாழ் மக்களையும் துயரக் கடலில் மூழ்கடித்தது என்றார். மேலும் அன்னாரின் மறைவுக்கு ஈடு இணையற்றோர் யாரும் கிடையாது எனத் துயரத்துடன் கூறினார்.