கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் நிதி பற்றாக்குறையால் பணிகள் நிறுத்தப்பட்ட சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிபோங் திபால் அருள்மிகு திரௌபதை அம்மன் ஆலயத் திருப்பணி செலவினை இந்து அறப்பணி வாரியம் ஏற்று கட்டுமான பணியை நிறைவுச் செய்யும் என அவ்வாலய திருப்பணி தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய இரண்டாம் துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.
இந்த ஆலய நடப்பு நிர்வாகத்தினர் திருப்பணி வேலைகள் நிறைவுப்பெற பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் உதவியை நாடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏறக்குறைய ரிம8 லட்சம் செலவில் இத்திருப்பணி வேலைகள் நிறைவுச் செய்ய இந்து அறப்பணி வாரியம் முழு மூச்சாக ஈடுப்பட்டுள்ளனர். திரௌபதை அம்மன் ஆலய திருப்பணியை இந்து அறப்பணி வாரியம் ஏற்றிருந்தாலும் திருப்பணி நிறைவுப்பெற்ற பின்னர் அவ்வட்டார பொது மக்களே ஆலய நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்படுவர் என தமதுரையில் நம்பிக்கை தெரிவித்தார் பேராசிரியர். ஆலயத் திருப்பணி வேலைகள் சிறப்புடன் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தலைவராக டாக்டர் குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலய நிர்வாகத்தில் செயல்படுபவர்கள் தங்களின் சொந்த இலாபத்திற்காக செயல்படாமல் சமுதாய மேம்பாட்டிற்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும் என மேலும் அவர் கேட்டுக் கொண்டார்.
2008-ஆம் ஆண்டு தொடங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாகத்தின் கீழ் தற்போது பத்து ஆலயங்கள் செயல்படுவது சாலச்சிறந்தது. இந்து அறப்பணி வாரியம் இந்தியர்களின் நலனுக்கு என்றும் முன்னுரிமை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.