நிலையான முன்னேற்றத்திற்கு சமூக மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் – மேயர்

Admin
A. Rajendran

பினாங்கு மாநகர் கழகத்தில்(MBPP) புதிதாக நியமிக்கப்பட்ட மேயர் டத்தோ இராஜேந்திரன் தலைமையில் அதிகாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய இரு முக்கிய கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து நிர்வகிக்கப்படும்.

இராஜேந்திரன் 23வது வயதில் பொறியியல் துறையில், உள்ளூர் மாநகர் கழகத்தில் (PBT) பணியில் அமர்ந்தார்.

பினாங்கு மாநகர் கழகத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், 4வது MBPP மேயராக அவர் நியமிக்கப்படுவார் என்று தனிப்பட்ட முறையில் நினைக்கவில்லை என்று இராஜேந்திரன் கூறினார்.

“அதிகாரமளித்தல் என்பது மிகவும் முக்கியமான அணுகுமுறையாகும், ஏனெனில், குடிமக்கள் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்க ஊக்குவிக்குவிப்பதோடு ஒருவர் பொறுப்புடன் பிரதிநிதித்துவப்படுத்தவும் உதவுகிறது.

“மாநகர் கழத்தில் உள்ள எனது கவுன்சிலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட நம் நகரத்தை வலுவானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கான சிந்தனைகள் மற்றும் தீர்வுகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அதிகாரமளித்தலை ஊக்குவிக்கிறேன்.

“ஊராட்சி மன்றம் மக்களுடன் பரஸ்பர புரிதலில் ஈடுப்படும்போது, MBPP இன் சில முடிவுகளின் அவசியத்தை பொது மக்கள் புரிந்துகொள்ள இயலும்.

“எனவே, பினாங்கின் முன்னேற்றத்திலிருந்து நாம் மட்டுமல்ல, நமது வருங்கால சந்ததியும் நன்மை பயன்பெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு இந்த இலக்கை அடைய விரும்புகிறோம். அதைப் பெற, எங்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை,” என்று அவர் இன்று கொம்தாரில் உள்ள தனது அலுவலகத்தில் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.

நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மற்றொரு முக்கிய அம்சம் நிலைத்தன்மை என்று இராஜேந்திரன் கூறினார்.

“இதனால்தான் எங்களின் முக்கிய கவனம் பருவநிலை மாற்றத்தை நோக்கியுள்ளது. நாம் செய்யும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

“பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஏற்கனவே மக்களையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதித்துள்ளன.

“அந்தப் பாதிப்புகள் மோசமடைவதைத் தவிர்க்க நாம் நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க பொது மக்களாகிய நாம் போதுமான நடவடிக்கையை மேற்கொள்கிறோமா?

“மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிப்பதை அமல்படுத்துவதன் மூலம் குப்பைக் கிடங்கிற்கு நமது கழிவுகளைக் குறைப்பதில் நம் பங்கைச் செய்கிறோமா? என சிந்திக்க வேண்டும்.

பினாங்கில் இயற்கை அடிப்படையிலான பருவநிலை ஒருங்கிணைப்புத் திட்டத்தை
Nature-Based Climate Adaptation Programme (PNBCap) செயல்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக MBPP தனது பங்கை ஆற்றி வருவதாக இராஜேந்திரன் கூறினார்.

PNBCap என்பது நகர்ப்புற பின்னடைவை மேம்படுத்துவதற்கும், இயற்கை அடிப்படையிலானத் தீர்வுகளைச் செயல்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்ற தாக்கங்கள் மற்றும் தீவிர வானிலை மாற்றத்திற்கு சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் முயற்சியாகும். மேலும், இது சமூக பின்னடைவை மேம்படுத்தவும், நிறுவன அடைவுநிலை உருவாக்கவும் துணைபுரிகிறது.

பினாங்குத் தீவு குறித்த தனது தொலைநோக்குப் பார்வை குறித்து கருத்து தெரிவித்த இராஜேந்திரன், இது ஒரு தனித்துவமிக்க நகரம், என்றார்.

“ஆம், நாம் பின்பற்றுவதற்குப் பல வெற்றிகரமான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

“இந்தத் தனித்துவமிக்கத் தீவு கடலால் சூழப்பட்டுள்ளது; பாரம்பரியம் நிறைந்தது; 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான மழைக்காடுகளைக் கொண்டுள்ளது மற்றும் குறைவான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

“மக்களின் தேவைகள் மற்றும் அதன் நிலைத்தன்மைக்கு ஏற்ப, நமது நகரத்திற்கு சிறந்ததைச் செய்ய முற்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இராஜேந்திரன் ஊராட்சி மன்றம் எதிர்நோக்கும் சவால்களையும் குறிப்பிட்டார்.

“நகர வளர்ச்சிக்கு ஏற்ப, மக்களின் எதிர்பார்ப்பும் கூடுகிறது. குறைந்த வளங்களுடன் மக்களின் எதிர்பார்ப்பை நாம் எப்போது பூர்த்திச் செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

“எங்கள் நகரத்தை ஒரு நிலையான நகரமாக உருமாற்றம் காண்பதற்குக் கூட்டு முயற்சியில் தனியார் துறை உடனான் ஒத்துழைப்பை வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பினாங்கில் போக்குவரத்து மேம்பாடு, பொது வசதிகள் மற்றும் தூய்மை ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இராஜேந்திரன் ஒப்புக்கொண்டார்.