நெகிழிப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மேலோங்க காணொளி போட்டி

Admin

புக்கிட் மெர்தாஜாம் – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) இந்த ஆண்டு ஏப்ரல் 28 முதல் ஜூன் 15 வரை ‘ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பை’ என்ற தலைப்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வு மேலோங்கச் செய்ய   குறு காணொளி போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ரோசாலி மொஹமட், இப்போட்டி செபராங் பிறை வட்டாரத்தில் இருக்கும்  இடைநிலைப்பள்ளி மாணவர்கள் (படிவங்கள் ஒன்று முதல் ஆறு வரை) மட்டும் பங்கேற்கலாம், என்றார்.

“இந்த போட்டி இளைஞர்களிடையே விழிப்புணர்வு மேலோங்க செய்யவும் நெகிழிப் பயன்பாட்டை குறிப்பாக உணவுப் பொட்டலம் மடிக்க பயன்படுத்தப்படும் நெகிழிப்பை; நெகிழி நீர் போத்தல்கள், நெகிழிப் பாத்திரங்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிகளை
பயனுள்ள வழிகளில் குறைப்பதற்கான சிந்தனைத் திறனை தங்கள் படைப்புகள் வாயிலாக சமூகத்திற்கு கொண்டு சேர்க்கவும் நடத்தப்படுகிறது. இது இப்போட்டியின் முதன்மை நோக்கமாக திகழ்கிறது.

“தயாரிக்கப்படும் காணொளி மூன்று நிமிடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வீடியோ கோப்பு அளவு 500MB ஆக இருக்க வேண்டும்.

“இது நாடகம் முதல் நகைச்சுவை வரை அல்லது ஆவணப்படம் என எந்த வகையிலும் தயாரிக்கலாம்.

“பங்கேற்பாளர்கள் தனிநபர் அல்லது ஐந்து நபர்களுக்குள் குழு முறையில் கலந்து கொள்ளலாம். மேலும், காணொளி மலாய் மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தயாரிக்க வேண்டும்.

“இம்மாதிரியான போட்டி மாணவர்களிடையே ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பயன்பாட்டினை புறக்கணிக்க ஊக்குவிப்பதோடு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை கொள்வதாக,” ரோசாலி எம்.பி.எஸ்.பி கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்  எம்.பி.எஸ்.பி ஊழியர் (செவ் எங் செங்) 012-4779330 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

காணொளி படைப்புகளை ச் சமர்ப்பிக்க இறுதி நாள் ஜூன்,15 ஆகும்.

இப்போட்டியின் வெற்றியாளர் ரிம600 ரொக்கப்பணம் மற்றும்  சான்றிதழை வெல்வர்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசு வெல்பவர்கள் முறையே ரிம400 மற்றும் ரிம300 பெறுவார்கள். இரு நிலை வெற்றியாளர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்படும்.

இரண்டு ஆறுதல் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள்  சான்றிதழுடன் ரிம100 ரொக்கப்பணம் பெறுவர்.