செபராங் ஜெயா – செபராங் பிறையில் உள்ள ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளை உள்ளடக்கிய வருடாந்திர பசுமைப் பள்ளி விருதளிப்பு திட்டம், பாலர் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பிற கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஏற்று நடத்தும் இந்த விருது 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதால், இது ஒரு நிலையான திட்டமாக கருதப்படலாம் என்று ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜேசன் ஹெங் மூய் லாய் கூறினார்.
“இங்குள்ள எம்.பி.எஸ்.பி கட்டிட அரங்கத்தில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு பசுமைப் பள்ளி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், திடக்கழிவு மேலாண்மை போன்ற பெரிய இலக்குகளை அடைய வேண்டுமானால், நமது அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் மேலாண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“இன்றைய இளைஞர்களிடையே இந்த விழிப்புணர்வை மேலோங்கச் செய்வதற்குப் பள்ளிகளில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். எனவே, இந்த விருதளிப்பு விழா சிறந்த தளமாக அமைகிறது.
“தற்போது உலகளாவிய நிலையில் எதிர்நோக்கும் பருவநிலை மாற்றப் பிரச்சனையை எதிர்கொள்ள உதவக்கூடிய இரண்டு மிக முக்கியமான குழுக்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடன்பெறுகின்றனர், என ஜேசன் விளக்கமளித்தார்.
அதற்கு முன்னதாக பேசிய எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமீட், இத்திட்டத்திற்கு ஆதரவாக பினாங்கு மாநில கல்வித் துறையின் முயற்சிகளை தனது நிர்வாகம் பெரிதும் பாராட்டுவதாகக் கூறினார்.
“செபராங் பிறை மூன்று மாவட்டங்களில் எம்.பி.எஸ்.பி-க்கு கழிவு உற்பத்தியைக் குறைப்பதற்கும் உதவிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் (மலேசியா) நிறுவன பிரதிநிதியாக பேசிய கார்லோஸ் கானோ எம்.பி.எஸ்.பி-க்கு ஒரு மூலோபாய பங்காளியாக இருப்பதற்கும் எதிர்காலத்தில் பசுமைப் பள்ளி விருதுகளுக்கு முக்கிய ஆதரவாளராக இருப்பதற்கும் அவரது தரப்பு உறுதியாக உள்ளது, என்றார்.
இம்முறை பசுமைப் பள்ளி விருதளிப்பு விழா செபராங் பிறையின் மூன்று மாவட்டங்களில் இருந்து 14 இடைநிலைப் பள்ளிகள் மற்றும் 40 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தூய்மையான மற்றும் பசுமையான பினாங்கு மாநிலத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதற்குப் பொறுப்பு மிக்க குடிமக்களை உருவாக்குவதே எங்களின் கடமையாகும்.
பினாங்கு மாநில அரசாங்கத்தால் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பினாங்கு பசுமைப் பள்ளி விருதுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.